Social Icons

Samstag, 30. Juli 2016

கவிமகன்.இ எழுதிய நீ உன் முடிவை சொல்லி விட்டாய்...!

நீ என்னை விட்டு
பிரிய நினைத்ததில்லை
என்னை இன்றிய வாழ்வுக்கு
ஆசைப்பட்டதும் இல்லை
முகத்துக்குள் முகம் வைத்து
பேசிய வார்த்தைகள்
வீதியோரம் வீசப்பட்ட
கடதாசியாய் காற்றோடு
அடிபட்டு செல்கிறது.

பிரியாத சொந்தமாய்
நீ பிரிந்து சென்று விட்டாய்
பிரிந்து விடாமல் இருப்பதாக
கண்ணுக்குள் கண்ணான
காதல் மொழியில்
சபதம் செய்தாய்
வெய்யில் பட்ட பனியாய்
கொடுத்த வாக்கை மீறி
நீ உன் முடிவை எடுத்து சென்றாய்

மனம் ஒன்றை மட்டுமே
எண்ணுகிறது
வாழ்க்கை பயணத்தின்
இறுதி எல்லை வரை
உன் கரம் என் கரத்தின்
பிடிக்குள் வேண்டும்.
குளிருக்கு சூடாய்
சூரியனின் எரிப்புக்கு குளிராய்...
எண்ணமெல்லாம் இது
நிறைந்து கிடக்க
வண்ணம் தொலைத்து
கருமைபூசி ஏன் சென்றாய்

சுயமாய் சிந்தக்க முடியாது
சுகமாய் சிரிக்க முடியாது
சிந்தை முழுக்க உன்
நினைவில் நான் என்பதறியாது
நீ சென்றே விட்டாய்
உன் கரம் தந்து
எனக்கின்னோர் தாயை
தருவாயா என்று என்னால்
கேட்க முடியவில்லை
நீ உன் முடிவை சொல்லி
நினைவை மட்டும்
விட்டு ஏன் சென்றாய்

என் முடிவை பற்றி
சிந்திக்கவே இல்லை
நீ போன திசையில் என்
விழிகள் நிலைத்து கிடக்கின்றன
நீ நடந்த பாதச்சுவடுகள் என்
இரத்தத்தால் நிரப்பப்பட்டு
உறைந்து கிடப்பதை கூட
நீ அறியாய்

நீ சென்று விட்டாய்
நீ பதித்த குருதிச் சின்னங்களோடு
நகர்கிறது இப்போதெல்லம்
என் பாதங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
விழியில் இருந்து வடியும்
குருதியின் இறுதித்துளி
உன் பாதச்சுவட்டை
நனைத்து கொள்ளும்
அப்போதெல்லாம் நான்
நடந்து வந்த பாதச்சுவட்டின்
இடம் ஈரமற்று காய்ந்து போகும்...
உன் பாத சுவட்டின் ஓரத்தில்
இரத்தம் தோய்ந்த உதடுகள்
பதியும் போதாவது உணர்ந்து கொள்
உன் வாழ்க்கை தன்
இறுதி துளி குருதியை
இழந்து விட்டது என்று...

ஆக்கம்   கவிமகன்.இ 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates