தபேலாவின் மெல்லிய ஒலிகள் தாறுமாக மழைபோன்று பொழிய.... பேஸ் கிட்டாரின் தந்திகள் விட்டு விட்டு உறும... 'கொஞ்ச நேரம் ஒதுக்கி, கூந்தல் ஒதுக்கி, குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்..' என்று ஜானகி காதுக்குள் சினுங்கிக் கொண்டிருக்க..., வைபரில் மெசேஜ் அனுப்புவதில் பிசியாக இருந்தேன் நான்..!!
என்னோடு அந்த 85 ம் இலக்க பேருந்துக்காக காத்திருந்த எல்லோருமே ஏறிவிட, முன் வாசலில், பேருந்தினுள் ஏறாமல், போனில் இருந்து கண்களை எடுக்காமல், மெல்லிய புன்னகையோடு ( கிட்டத்தட்ட லூசு மாதிரி ) டைப் பண்ணிக்கொண்டே இருந்தேன்..!!
'பிரான்சில் பிறந்திருப்பார்' என்று தோற்றத்தில் அனுமானிக்கக்கூடிய அந்த 'அராப்' இன சாரதிக்கு கோபமே வரவில்லை ( இந்த இடத்தில் 'அடையான்' என்று விளிக்கவில்லை என்பதை மதுரன் கவனிக்கவும் ). அவர் நாலைந்து முறை 'மிசூ மிசூ' என்று என்னைக் கூப்பிட்டிருக்க வேண்டும்..!! காதில் ஷங்கர் மஹாதேவன் 'கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்' வரைக்கும் போய்விட்டார். அதால கூப்பிட்டது கேக்கேல...!!
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தால், எல்லோரும் புன்னகையோடு என்னையே பார்த்துக்கொண்டு நின்றார்கள். சட்டென்று தாவி பேருந்துக்குள் ஏறி, 'தெசோலே..... குப்பின்' என்று தோள்களைக் குலுக்கி, 'பதில் போடாட்டி கொன்னுடுவாள்' என்பதாக சைகையிலே சாரதிக்குப் புரியவைத்தேன்.
அவரும் 'எல்லா இடமும்' என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு புன்னகையோடு பேருந்தை எடுத்தார். ( எனக்கு முதல் நிறையப்பேர் இப்படி மினக்கெடுத்தி இருப்பாங்க போல )
முன்பும் ஒருமுறை இப்படி வைபரில் மெசெஜ் அனுப்பிக்கொண்டே வீதியால் நடந்து போய்க்கொண்டு இருக்கும் போது எதிரே வந்த 'ஆமினாத்த தியலோ' என்று பெயரைக்கொண்ட செனேகல் நாட்டுக்காரி மேல மோதி ஏச்சு வாங்கியதை இந்த இடத்தில் உபரித் தகவலாக சேர்த்துக் கொள்கிறேன் ( ஆமினாத்த என்ற பெயர் எனது ஊகம் மாத்திரமே - ஏனெண்டா ஒரு நாலைஞ்சு பேரைத்தான் எல்லாப் பொம்பிளையளுக்கும் மாறி மாறி வைக்கினம் ).
இன்று காலை 'போர்து கிளிஞ்சான் கூரில்' குறைந்தது 10 செக்கன்களாவது பேருந்தை மினக்கெடுத்தியிருப்பேன். ஆனால் சாரதி கோவிக்கவே இல்லை. இதுதான் காதலுக்கு மரியாதை என்பதோ??
குறிப்பு - படிப்பு விஷயமா ஒரு நண்பனோடு சாட் பண்ணிக்கொண்டிருந்தேன் என்று சொன்னால் இந்த சமூகம் நம்பாது. ஆகவே அது 'குப்பின்' ஆகவே இருக்கட்டும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen