விடியற்சாமத்தில்
எழுந்து கும்மிருட்டில்
பழம் பொறுக்கி
பதம் பார்த்து அம்மாவிடம்
ஒரு கட்டளை
சுட்டால் அந்த கொட்டை
எனக்கு தான் என்று
கரு கருவென்ற பழம் அது
மூன்று விதை கொண்ட
பழம் அது
சதை கொண்ட பழம் அது
ஒரு வேளை பசி மறக்கும்
பழம் அது
வசந்த காலத்தின்
அடையாளமாய்
எமை குதூகலிக்க
வைக்கும் பழம் அது
பழஞ்சோறு பழச்சாறு
தேங்காய் பூவுடன்
சேர்த்து உண்டால்
பனிக்கட்டி போல்
குளிரும் வயிறு
பனாட்டு இட்டு
பழஞ்சோறு உண்டால்
அதை விட உணவேது
காலைப்பொழுதில்
பனங்காய் பணியாரம்
குதூகலிக்கும் வீடும்
நினைத்தால் நாவூறும்
இன்றும்
பனை இழந்தோம்
மனையும் இழந்தோம்
ஊரிழந்தோம்
உறவிழந்தோம்
அனைத்தும் இழந்தும்
நினைவுகளை மட்டுமே
வைத்திருக்கிறோம்
ஈழத்து அகதிகளாக...
தென்னந்தோப்பில்
களைப்பாறி
பனை தனில்
நுங்கு(நொங்கு)
உண்டு வாய்க்காலில்
குதித்தோடி
ஆற்றினில் குளித்த
காலம் தான் வருமா
இந்த பனம்பழம் போல
எட்டாக்கனியே
எம் வாழ்வு..
ஆக்கம் பவித்ரா நந்தகுமார்
Keine Kommentare:
Kommentar veröffentlichen