Social Icons

Sonntag, 4. Dezember 2016

உறுதியாய் நின்ற விழுதினில்*கவிதைஈழத் தென்றல் *

படர்ந்து நின்ற பாரிய மரத்தின் விழுதுகள்
நின்றன உறுதியாய் நிஜம் நாங்களென
மேலிருந்து கீழாய் ஆழமாய் பற்றிய விழுதினை
அதிசயமாய் பார்த்தது புதிதாய் முளைத்த விதை!

பூப்பூவாய் கண்மலர் மலர்ந்து
புன்னகையாய் சிமிழ் வாய் திறந்து
பிஞ்சுக் கால்களை செல்லமாய் உதைத்து
பற்றிப் பிடித்திட கைகளை அசைத்து!

உறுதியாய் நின்ற விழுதினில் ஒன்று
புது விதையை பார்த்தது, சிரித்தது
முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக
நான் உன் மாமனடா என்றது!

மற்றொரு விழுதோ புன்னகை பூத்தது
பாசமாய் ஆயிரம் பொன்னகை வார்த்தது
கனிவுறும் குரலில் மென்மையாக
அத்தை நானடா கண்ணே என்றது!

ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு உருவாய்
சொந்தங்கள் என்றே பந்தங்கள் காட்டின
ஆராவர இன்பக் களிப்பைக் கூட்டின
அன்பென்னும் அரும் அமுதை ஊட்டின!

தாய் மரம் விதையினை தழுவித் தாங்கிட
தந்தையின் கிளைகள் தலையைத் தடவிட
விதையின் விழிகளில் வியப்பும் திகைப்பும்
விரிந்த இதழ்களில் களிப்பும் சிரிப்பும்!

நாளை நானும் விருட்சமாவேன் நிஜமாவேன்
உ ன்னைப் போன்றே விதைகளை விதைப்பேன்
விழுதுகள் என்றே உறவுகள் வளர்ப்பேன்
அன்பில் என்றும் கலந்தே சிறப்பேன்!

பாசக்கரம் எனவே கிளைகளை விரிப்பேன்
நட்பெனும் பறவைகள் அமர்ந்திட சிலிர்ப்பேன்
உறவெனும் விழுதுகள் உரமாய் காத்திட
உறுதியாய் நின்றே நன்மைகள் பயப்பேன்!

புத்தம் புது விதையோ புதினங்கள் பார்த்தே
புன்னகையுடனே தலையினை அசைத்தது
விதையின் கண்களில் கனவுகள் விரிந்தன
பாசம் நேசம் பிறவிப் பயன் என்றன!

விதைக்கும் விதையில் வினையேதுமில்லை
விஷத்தை விதைத்தால் பயனேதுமில்லை
நல்லதை நினைத்தே நானிலம் போற்றிட
நல்விதைகள் விதைத்தால் குறையேதுமில்லை!

நல்லன ஒன்றையே நாம் என்றும் பகிர்வோம்
நாட்டுக்கும் வீட்டுக்கு நல்லதை நினைப்போம்
அன்பையும் பண்பையும் பகிர்ந்தே மகிழ்வோம்
மனிதம் மறவா மனிதராய் வாழ்வோம்!
 
ஆக்கம் ஈழத்
தென்றல்
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates