Social Icons

Donnerstag, 30. Juni 2016

ரதி மோகன் எழுதிய குறுங்கவிதை(வானம் தொட்டு பறந்திடுவோம்)

வானம் தொட்டு பறந்திடுவோம்
கானமழையில் நனைந்திடுவோம்
பாசம்தான் வீடு என்போம்
நேசம்தான் வாழ்வென்போம்
மரணத்தையே சாகடிப்போம்
அன்றில் பறவைகள் நாமாவோம்....
 
ஆக்கம்கவிஞை
ரதிமோகன்

Mittwoch, 29. Juni 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய உன்னது நிலை மறந்திடலாம்

வர்ணம் பூசிய வாழ்க்கையடா
வறுமை பேசும்
வாக்கையடா
நிர்ணயமில்லா இந்த இயற்கையடா
நிம்மதி என்பது இங்கே கிடைக்குமடா

மனிதன் என்பதில் பெருமையில்லை
மனதில் எரித்திடு உன் பொறாமைகளே
புண்ணியம் செய்திடு இந்த பூமியிலே
புன்னகை செய்திடும் உந்தன் வாழ்வினிலே

இன்னல்கள் வாழ்வினில் இடம் பெறலாம்
உன்னது நிலையினை நீ மறந்திடலாம்
நன்மைகள் செய்து நீ வாழ்ந்திடலாம்
நல் மனிதனென்று உலகில் வலம் வரலாம்

முன்னோர் சொன்ன பழமொழி உண்மை
இன்னோர் செல்கிற வழிமுறை என்ன
நல்லோர் மொழிந்த வார்த்தைகள் வெண்மை
நாளும் ஏற்று நடந்தால் உனக்கு நன்மை

உன்னுடல் மண்ணில் புதைந்திடும் - நீ
செய்த நன்மைகள் உன்னை புகழ்ந்திடும்
உண்மை தான் உலகினில் உயர்விடம்
உணர்ந்து நீ வாழ்ந்திடு உயிர்பெறும்


ஆக்கம் வித்தென்றல் 


                                                

 

Montag, 27. Juni 2016

மீரா குகனின் எழுதிய பெண் என்றால் பலவீனமானவர்களா ?

உயிரை கருவில் சுமந்து, உடலை உருவாக்கி, உணர்வுகளை ஊட்டிக் கொடுத்து, பசிதனை போக்கி பாரினில் நடைபயில சொல்லிகொடுக்கும் ஒரு மிக சிறந்த பிறப்பு பெண் .
ஒரு ஆணினால் இந்த சிறப்பை எத்தனை தான் தாம் வலிமை கொண்டவர்கள் என்று காட்டிக்கொண்டாலும் அவர்களால் முடியாத ஒரு காரியமாகும் . ஆனால் அங்கே ஆண்மகன் தோற்று தான் போகிறான் .
ஒரு ஆண்மகனுக்கு சரி சமமாக நின்று செயலாற்ற கூடிய திறன் பெண்ணிடமே உண்டு . ஆனால் அப்படியிருந்தும் அந்த ஆண்மகனுக்கு தன்னுள்ளே இருக்கும் கர்வமும் எமது சமூகம் கொடுக்கும் தனித்த அந்தஸ்த்தும் பெண்களை ஏனோ பலவீனமானவர்களாக சித்தரித்து அவர்களை அடிமைபடுத்துவதில் இன்பம் காண்கிறது .
உலகநடப்பில் எத்தனை பெண்கள் நாட்டை சிறப்பாக ஆள்கிறார்கள் . நான் வாழும் இந்த ஜேர்மன் நாட்டை வழிநடத்துவதும் ஒரு பெண்ணே .
ஆனால் நம்மிலே வெளியே தெரியாமல் ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் உண்டு . தமிழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் கட்டுபாடுகள் மிக மிக அதிகம் . நம் பெண்ணை காப்பதற்கே நாம் கட்டுப்பாடாக இருக்கிறோம் என்று கூறிகொண்டாலும் அந்த பெண்ணிற்கும் சொந்த விருப்பு, வெறுப்புகள் இருக்கும் என்பதை ஏனோ பல சமயங்களில் மறந்து தான் போய்விடுகிறார்கள் .
ஒரு பெண் என்பவள் ஒரு ஆணைப் போன்றே வாழும் சம உரிமை கொண்டவள் . அவளுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் மறுக்கும் உரிமை அவளுக்கே உண்டு . அதே மாதிரியே எத்தனை பொருத்தம் பார்த்து பெற்றோர் கலியாணம் செய்து கொடுத்தாலும் திருமண பந்தத்தில் கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு இன்றி குழப்பங்கள் உருவாகும் பொழுது பணிந்து போவதும் பெண் தான் .
அவளின் மீதே அந்த சுமையும் சுமக்கபடுகிறது . அதாவது தன் கணவனின் குணாதிசயங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்வதை தவிர வேறு வழி அவளிடம் இருப்பதில்லை. அப்படியே தன்னை மாற்றிக்கொண்டு பணிவாக அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ முயன்றால் அந்த இயல்பே அந்த கணவனுக்கு அதிகாரத்தை கையிலே கொடுக்கப்பட்டு அங்கு அடிமைத்தனம் நடைமுறையாக்கப்பட விளைகிறது .
„இவள் என் மனைவி, எனக்காக எத்தனயோ விட்டுகொடுப்புகளை செய்கிறாளே“ அந்த செயலை மெச்சி அவளை கொஞ்சம் சந்தோஷமாக வைத்திருப்போம் என்ற எண்ணம் ஏனோ அந்த ஆண்மகனுக்கு வருவதில்லை.
மாற்றாக அதையே பெண்ணின் பலவீனமாக பார்க்கப்பட்டு அவனின் அதிகார தோரணை இன்னமும் உயர்கிறது . இது எத்தனை அநியாயமானது!.
இறைவன் பெண்ணை அழகாகவும் மென்மையாகவும் படைத்திருந்தாலும் அந்த தன்மைகள் தான் அவளின் பலம் என்பதை பெண்ணும் அதே நேரத்தில் ஆணும் மறந்து போகிறார்கள் .
பெண்ணின் அழகை அனுபவிக்க நினைப்பதும் , அவளும் தம்மைபோன்றே ஒரு உயிர் என்பதையும் அங்கே மறந்து போவதே மிக கவலைக்குரிய விடயமாக இருக்கிறது .
இதற்காக ஒட்டுமொத்தமாக ஆணினமே அப்படிப்பட்டவர்கள் என்று நான் கூற வரவில்லை . பல இடங்களில் பல பெண்களும் தமது குணயியல்புகள் மாறி ஆண்களை வருத்தும் சந்தர்ப்பங்களும் நடைபெற்று கொண்டுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை .
இறுதியாக பொதுவாகவே கோபம் கொண்டால் வஞ்சம் தீர்க்க தயவு செய்து முனைய வேண்டாம். ஒரு உயிரின் வலியை தயவு செய்து ஒரு செக்கன் நினைத்து பார்க்கவேண்டும் . ஏதோ தம்மால் பேச முடியும் என்பதற்காக ஒரு பெண்ணை நினைத்த விதத்தில் நிந்திக்காது அவளை தரக்குறைவான பேச்சுகள் மூலம் மனதை நோகடிக்காமல் ஒரு சக ஜீவனாக பார்த்து மதிக்க கற்றுகொண்டால் போதும் எமது சமூகம் மற்றைய சமூகங்களை விட உயர்ந்து நிற்கும் . 



ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி
 

Sonntag, 26. Juni 2016

'இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா.26.06.2016, சிறப்பாக நடந்தெறியது.

மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் நேர்த்தியாக நிறைவேறிய 'இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா.
சவூதி அரேபியாவில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் கவித்தென்றல் ஏரூர் எழுதிய 'இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது வன்னியின் மாற்றுத் திறனாளிகளுக்கு நல்வாழ்வு அளிக்கும் இனிய வாழ்வு இல்லத்தில் 26.06.2016, ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு இடம்பெற்றது.

நிகழ்வுக்கு முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் கம்பீரக் குரலோன் சி.நாகேந்திரராஜா தலைமை தாங்கினார். தமிழ் மொழி வாழ்த்தினை வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்யாலயாலய மாணவிகள் வழங்கினர். வரவேற்பு உரையினை வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய ஆசிரியர் சுதர்சன் வழங்கினார். ஆசியுரையினை சிவஸ்ரீ நவரத்தினம் வழங்கினார். வரவேற்பு நடனத்தினை வவுனியா சிதம்பரேஸ்வரா நடனாலயப் பள்ளி இயக்குநர் செந்தூர்ச்செல்வன் வழங்கினார். 

வாழ்த்துரையினை கவிதாயினி முல்லை றிசானா வழங்கினார். அறிமுகவுரையினை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நிகழ்த்தினார். நூலினை இனிய வாழ்வுச் இல்லச் சிறார்கள் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை வாணி வைத்திய நிலைய ஆயுர்வேத வைத்தியர் சிவசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார். வெளியீட்டு நிகழ்ச்சிகளை முல்லைஸ்வரம் இசைக்குழு இயக்குநர் முல்லை யோகேஸ் தொகுத்து வழங்கினார்.

வெளியீட்டு விழாவில் கிடைக்கப்பெற்ற நிதியினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் இனிய வாழ்வு இல்ல முகாமையாளர் திருச்செல்வம் அவர்களிடம் வழங்கி வைத்தார்.

தொடர்ந்து சிறப்புரையினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் ஆற்றினார். வெளியீட்டாய்வுரையினை கலாபூசனம் நடராஜா இராமநாதன் வழங்கினார். தொடர்ந்து செல்லமுத்து வெளியீட்டகம் தன்னின் பணிகளைப் பாராட்டி அறிவிருட்சம் துரித கல்வி மேம்பாட்டு சமூக அமைப்பினரால் கெளரவிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்கள் தலைமையில் 'சிரிக்க சிரிக்க சிரிப்பு வரும்' எனும் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்கள் காவலூர் அகிலன், கிளியூர் ரமணன், புங்குடுதீவு தயான் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் இனிய வாழ்வு இல்ல மாணவிகளின் நடனம் மற்றும் இனிய வாழ்வு இல்ல மாணவி தமிழினி அவர்களின் பாடல் என்பனவும் இடம்பெற்றது. கவித்தென்றல் ஏரூர் அவர்களுக்கான பாராட்டுரையினை இனிய வாழ்வு இல்லம் முகாமையாளர் திருச்செல்வம் வழங்கினார்.


நன்றியுரையினை 'ஒரு பூவின் மடல்' கவிநூல் ஆசிரியர் முல்லை தனூஜா ஆற்றினார். தூர தேசத்தில் வாழ்ந்தாலும் ஈழ மண்ணின் மாற்றுத்திறனாளிகளை மனதிருத்தி அவர்களுக்கு சமர்ப்பனமாக கவித்தென்றல் ஏரூர் எழுதிய இந்த நூல் மனிதர்களை நேசிக்கும் ஒரு கவிஞனின் மனமாகவே பலராலும் பாராட்டப்பட்டது.

Samstag, 25. Juni 2016

ஈழத் தென்றல் எழுதிய உன்னைவிட உத்தமன் கண்டாயோ ..

தொட்டில் தொடங்கி
சுடுகாடு செல்லும் வரை
எத்தனை முகங்கள்..
எத்தனை குணங்கள்? 

குணம் கொண்டோராய்
நடிக்கும் குள்ளநரிகள்
பேய் முகம் மறைத்து,
இனிக்க, இனிக்க பேசியே! 

முதுகில் குத்தும் இராட்சதர்கள்
முகம் காட்டும் கண்ணாடிபோல்,
நீயறிவாய் மற்றவன் யாரென
காலத்தின் கோலமென.. 

சொல்லாதிருக்க இயலவில்லை,
சொல்லி திருத்தவும் முடியவில்லை,
தினம் உயிர் பறிக்கும் காலன்
உன்னைவிட உத்தமன் கண்டாயோ ..

நிதம் நடக்கும் அழிவுக்கு
நீதான் காரணம் என்றால்,
காலனும் உனக்கு எதிரிதான்
கயவனே, மனதை தொட்டு சொல்,

உள்ளொன்று புறமொன்றென்ற
வாழ்வால், உலகுக்கு என்ன பயன்?
உன்னைப் பெற்றவர்கள் ஓர்நாள்
பெருமைப்பட தான் முடியுமா?

ஆக்கம்

ஈழத் தென்றல்

Freitag, 24. Juni 2016

கவிஞர் ரதிமோகன் எழுதிய நீதானே என் கவிதை

நீ பேசியவார்த்தைகளை
கோர்த்தேன்
கவிதை என்றனர்..
நீ சிந்திய சிரிப்பினை
இணைத்தேன்
சந்தம் என்றனர்...
நீதானே என் கவிதையென்று
எவருக்கும் புரியவில்லை...


                                                             ஆக்கம்க விஞர்
ரதிமோகன்


கவிஞை சுபாரஞ்சன் எழுதிய கண்களில் சிக்கிய புறா

கொப்பில் ஏறிக்
குந்திக்கொண்டு
குறுகுறுத்துப் பேசுகிறது
கொஞ்சும் புறா ஒன்று...

படபடத்து
சிறகடித்து
பறந்து போன
பாசப் புறாக்களை எண்ணி
கலங்கியதோ.....!!


ஆக்கம் கவிஞை
சுபாரஞ்சன்  


(எனது கண்களில் சிக்கிய புறா)

Dienstag, 21. Juni 2016

அஜ்மல்கான்எ ழுதிய எண்ணியபடி

துயரங்கள் இல்லாத வாழ்ககையும்
இல்லை
இன்பங்களால் வாழ்ந்த மனிதனும்
இல்லை
இங்கு

எங்கு பார்த்தாலும் புதுமைகள்
எப்போதும் நின்றுவிடுமா 
இளமைகள்
என் கனவுகளை உடைத்திட

துன்பம் நிறைந்த
இன்பங்களாய் ஆயிற்று
என் முகம் கண்டு
பேசத என் வாழ்க்கையின்
விம்பம்

சிந்திக்கிறேன் சிந்திக்க
கூட மனம் இல்லாது
இங்கு 
பணம் உள்ளது என
எண்ணாதபடி


ஆக்கம்

பொத்துவில்
                                                                        அஜ்மல்கான்

Sonntag, 19. Juni 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய தந்தையர்தினம்

தந்தை சொல்.....
மிக்க மந்திரமில்லை
தரணியில் வென்றிட ,

இதைவிட தந்திரமில்லை


தந்தையவன் ....
எந்திரமில்லை
சொல் தவறி நடந்தால் 
நீ பிள்ளையுமில்லை

கண் போற்றும் ,
அன்னையின் தெய்வம்
பின் பற்று துன்பமும் இன்பம்

அன்னையும் பிதாவும் 
முன்னெறி தெய்வம்
நீ நன்னெறி கொண்டால் 
உன்னை கொண்டதில் செல்வம்

தானாடாட்டிலும் தன் தசையாடுமே
தாலாட்டிலும் அவன் 
துணை தாலாட்டுமே

தோள் மீது உன் சுமையும் முல்லை
அவன்றின்றி நீயும் இல்லை
செஞ்சோற்று கடனா என்ன?
உன் சோற்றை தருவான் உண்ண..!

பெற்ற பிள்ளை பெருமை தரும்
கற்ற பின்னும் தன் பெயர் கூறும்
கற்பனையில் தினமும் எண்ணும்
உற்ற நண்பன் தந்தையாகும்.!

உன் பெருமை ஊர் முழுக்க சொல்வார்
உனக்கேதும் என்றால் உள்ளுக்குள் அழுவார்

ஆக்கம் வித்தென்றல் 


                                                



பவித்ரா நந்தகுமார் எழுய அம்மா அந்த கொட்டை எனக்குதான்!


விடியற்சாமத்தில்
எழுந்து கும்மிருட்டில்
பழம் பொறுக்கி
பதம் பார்த்து அம்மாவிடம் 
ஒரு கட்டளை 
சுட்டால் அந்த கொட்டை 
எனக்கு தான் என்று

கரு கருவென்ற பழம் அது
மூன்று விதை கொண்ட
பழம் அது
சதை கொண்ட பழம் அது
ஒரு வேளை பசி மறக்கும் 
பழம் அது

வசந்த காலத்தின் 
அடையாளமாய் 
எமை குதூகலிக்க
வைக்கும் பழம் அது

பழஞ்சோறு பழச்சாறு 
தேங்காய் பூவுடன் 
சேர்த்து உண்டால் 
பனிக்கட்டி போல் 
குளிரும் வயிறு
பனாட்டு இட்டு 
பழஞ்சோறு உண்டால் 
அதை விட உணவேது 
காலைப்பொழுதில்

பனங்காய் பணியாரம்
குதூகலிக்கும் வீடும்
நினைத்தால் நாவூறும் 
இன்றும்

பனை இழந்தோம் 
மனையும் இழந்தோம் 
ஊரிழந்தோம் 
உறவிழந்தோம் 
அனைத்தும் இழந்தும்
நினைவுகளை மட்டுமே 
வைத்திருக்கிறோம் 
ஈழத்து அகதிகளாக...

தென்னந்தோப்பில் 
களைப்பாறி
பனை தனில் 
நுங்கு(நொங்கு)
உண்டு வாய்க்காலில் 
குதித்தோடி
ஆற்றினில் குளித்த 
காலம் தான் வருமா
இந்த பனம்பழம் போல 
எட்டாக்கனியே 
எம் வாழ்வு..


ஆக்கம் பவித்ரா நந்தகுமார் 

கவிச்சுடர் சிவரமணி எழுதிய தந்தைக்கு வாழ்த்து

தந்தைக்கு வாழ்த்து 
தவறாது சொல்வேனே
மறைந்த தெய்வங்களுக்கு 
மனதார சொல்வேனே

அன்னையில்லை தந்தையில்லை 
அவனியிலே உற்ற சொந்தமில்லை
பற்றறுக்கவில்லை ஆனாலும் 
பயணம் செய்கிறேன் 
பற்றுக்கொண்ட உறவினால்

அம்மாக்கு செல்லப்பெண் 
அப்பாக்கு வாயாடிப்பெண் 
அன்பான குடும்பத்திலே 
அகமகிழ வாழ்ந்ததொருகாலம்

இந்நேரம் நினைத்ாலும் 
இழப்புக்கள் வலிக்கிறது 
எந்நேரம் நான் துயில்கொள்வேன் 
மீளாது வந்து உமைச்சேர ...

அப்பா.....
நீங்கள் போனபின்னே 
அம்மா தானே என் ஆதாரம் 
அவவையும் இழந்தபின்னே 
அன்புமகள் படும் துயரம் 
அங்கிருந்து அறிவீரோ

ஆசி எனக்கு போதுமென்று
அவசரமாய் சென்றீர்கள்
அப்பாக்கு வாழ்த்து மட்டும் போதுமென்று
அன்புமகள் விடுவேனோ

அப்பாக்கள் இல்லாது 
மானிடமே இருக்காது 
நல்லதொரு அப்பாவை நாமும் இழக்கலாகாது


உலகில் உள்ள அப்பாக்களை 
உளமார வாழ்த்துகிறேன் 
உள்ளன்பு நேர்த்தியுடன் .
உயர்வுபெற்று வாழ்கவே !!!


சிவரமணி

Donnerstag, 16. Juni 2016

விமல் குமாரசாமி அவர்களின்பிறந்தநாள்(16.06.16)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ‌் நாட்டில் வாழ்ந்துவருபவருமான விமல் குமாரசாமி அவர்களின்பிறந்தநாள் 16.06.2016 இவர் புலம் பெயர்வாழ்வில் இணையத்தளங்கள் உருவாக்கும் வல்லமை பெற்று தன் பணியை ஊடகத் துறையில் இணை த்து பணி தொடங்கினார்.
சிறுப்பிட்டி மண்ணின் பிறப்பு .இவன் எங்கள் மண்ணில் பிறந்ததே தனிச்சிறப்பு
எமது ஊருக்காய் இவர் செய்த பணிகள் என்ன?பேச்சிலே வீரம் கொள்ளாது செயல் வடிவில்
எதையும் ஆக்கிவைக்கும் வீரன்.பேரின்பம் அதில் காணும் நல்ல தோழன்.
நேர் பாதையில் நடந்து செல்லும் நோக்கம் நீதியின் பார்வை தான் இவன் போக்கு
தாயானாலும் தாரமானாலும் உடன் பிறந்தோர் ஆனாலும் உறவுகள் ஆனாலும் ஊரானாலும்
தவறுக்கு இடம் கொடுக்கமாட்டான்.
பேச்சிலே சல சலப்பு இருக்கும் ஆற்றிடும் சேவையில் நல் நோக்கிருக்கும்
தான் வளர்ந்தது மட்டுமல்லாமல் பல இணையங்கள் வளரக் காரணமானவன்
ஊர் இணையங்கள் மேல் இவனுக்கு தனி ஆசை அவற்றை வளர்த்து விடுவதிலும் தணியாத ஆசை
இவன் எழுத்து வன்மை மிக்கவன் எவருக்கும் அஞ்சாது நிற்பவன் நீதியை நெஞ்சில் சுமந்து
நேர் நோக்காய் போரிடும் வீரனாய் உலாவருபவன் நாட்டிலும் நல்ல காரியங்களிலும் ஒன்றியங்களிலும் நல் நோக்குக் கொண்டு செயலாற்றுபவன் இணையப் பரப்பில் இன்றைய உலகில் எத்தனையோ நல்ல விடையங்களைச் செய்து வருகின்றனர்அந்த வகையில் சிறுவை தந்த சிப்பியாக ஊடகக் கவிஞான் விமல்
எங்கள் சிறுப்பிட்டியை முழு உலகும் அறியவைத்த ஆற்றல் மிக்கவன்தன் ஊர் மீதும் உறவுகள் மீதும்பற்றுக் கொண்டவன்.
பல கவிஞர்களை பாடகர்களை வெளிக்கொண்டுவரக் காரணமானவன் பல படைப்பாளிகளை வெளிக் கொண்டு வரக் காரணம் ஆனவன் வெளி நாடு வந்து வீணே துாங்காது ஊரின் பெயரில் இணையத் தளம் தந்தவன்
இவனை பாரில் வாழ் எம் தமிழ் உறவுகள் சார்பில் இணையப்பரப்பில் இன்னும் பல சேவைகள் செய்து நீடுழி வாழ்க என வாழ்த்துவோம்
வளம்பொங்கி வாழ்க
இனிய உள்ளம் கொண்டவனே!
இணையத்தால் எம்மோடு இணைந்தவனே !
இன்பமாய் கதை உரைத்தாய்
இதயத்தை உன்வசம் இழுத்தாய்!
சிந்தையில் புதுமை கொள்வாய்
சிந்தித்து செயலும் செய்வாய்!
பந்தத்தை காத்து நிற்பாய்
பணியாற்றி மனம் மகிழ்வாய்!
பாசத்தில் சிகரமாவாய்
பரிவுற்று செயலும் செய்வாய்!
நீ பல்லாண்டு வாழ்ந்து
பலசேவை செய்து
பல காலம் வாழ்க என
வாழ்த்துவோர்
மனைவி பிள்ளைகள்
இரத்த உறவுகள் ஊர்வாழ் உறவுகள் நண்பர்கள்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்
ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா குடும்பத்தினர்.
ரஐன்குடும்பத்தினர் சுவிஸ்
அருன் குடும்பத்தினர் சுவிஸ்
நடராசாகுடும்பத்தினர் சுவிஸ்
தேவன் குடும்பத்தினர் சுவிஸ்
கவிஞர் என்.வி.சிவநேசன் குடும்பத்தினர்.
பாடகர் காந்தக்குரலோன் கானமணி கணேஸ்ரஐன்
நடராசா குடும்பத்தினர்.
ஊடகச் செம்மல் மணிக்குரல் தந்த முல்லை மோகன் குடும்பத்தினர்
பாடகர் ஐெயா குடும்பத்தினர்
பாடகர் யோகன் குடும்பத்தினர் மற்றைய கலைஞர் குடும்பங்களும் இணையக் குடும்பங்கள்
வாழ்க வளமுடன் என வாழ்க உங்கள் பணிகள் உலகப்பரப்பில் வளம்பெறுக எம்மொழிகாத்து நின்று .
எஸ்.ரி .எஸ்கலையகம் டோட்மூண்ட் யேர்மனி.
வாழ்க வளமுடன்

Montag, 13. Juni 2016

கவிப்புயல் இனியவன் எழுதிய நெருப்பாக நீ இரு ....

நெருப்பாக நீ இரு ....
நீராக நான் வந்து ....
அணைக்கிறேன் ...
காதல் ....
கருகிப்போகட்டும் ......!!!

என் புருவத்தில் ....
ஊஞ்சல் ஆடியவலே ....
இப்போ கண்ணில் ...
இருந்து........
வெளியேறுகிறாள் ....!!!

உச்ச கட்ட காதல் ....
காட்சி முடிவுக்கு ....
வந்தது .....
காட்சியை பார்ப்பவர் ....
கண்களில் கண்ணீருடன் ....!!!


ஆக்கம் கவிப்புயல் இனியவன்





பொத்துவில் அஜ்மல்கான் எழுதிய தாஜ்மஹளே

காதல்களின் சின்னமாய்
திகழ்கின்றாய்
என் காதலின்
உன்னதம்
தெரியாது

இரு உயிருக்காக
அன்று கட்டியது
தாஜ்மஹால்
என் உயிரிருந்து
இருவுயிர் கலந்து
கட்டியது 
இன்று
என் கல்லறை

யமுனை ஆற்றோடு
கலந்த தாஜ்மஹால்
என் காதலையா
புரிந்து கொள்ள
போகின்றது


உயிரில்லாது உலகை
இரசிப்பவன் நீ
உயிர் இருந்து ஊனமாய்
கிடப்பவன் நான்

என் காதல்
ஞாபகங்களை கூறினால்
தாஜ்மஹால் கூட
சிதைந்துவிடும்
ஒரு கணம்

பல கரங்கள் சேர்ந்து
கட்டியது
அன்று தாஜ்மஹால்
பல ஜென்மங்களாய்
தீராத துன்பங்களால்
கட்டியது என் கல்லறை


ஆற்றோடு மறைந்து
போகும் தாஜ்மஹால் 
கூட
என் கல்லறையில் மிதந்து கொண்டு
போகும் என்
நினைவுகளை சற்று
உற்றுப் பார்த்தால்
ஊமைக் கண்ணீர் விடும்
எனக்காய்

என் ஞாபகங்களை 
காண இன்று
நானும் இல்லை
உன் காதலை காண
மும்தாஜும்
இல்லை
அன்று....




ஆக்கம் பொத்துவில்
                                                                அஜ்மல்கான்


Freitag, 10. Juni 2016

குமுதினி ரமணன் எழுதிய மனதிலே தைத்த முள்.

பள்ளி செல்லப் பார்த்திருந்தான்.
கண்களாளே தூது விட்டான்.
கனவெல்லாம் சிரித்திருந்தான்.

பேசி மெல்ல மனம் தொட்டான்.
காதல் எனச் சத்தியம் செய்தான்.

என் இதயக் கோட்டை ராணி என்றான். 
மாலையிட்டு காலமெல்லாம் 
மங்கையுன்னைப் பார்த்திருப்பேன்
மயக்கம் என்ன பெண்மயிலே.

வெளிநாடு நான் செல்ல விடை
தருவாய் கலங்காதே பொன்மானே.
உள்ளத்தோடு நீ என்றும்.
பிரிவென்பது உடல் ஒன்றே.

கண்ணீரோடு விடைகொடுத்தாள்
கலங்காதே விரைந்துடுவேன்.
சிலகாலம் பதில் இல்லை.
பேச்சு மூச்சு ஏதுமில்லை.

ஊரெல்லாம் சொல்லியழுதாள்.
காதோரம் வந்த செய்தி
இடியாக நெஞ்சுக்குள்.
கண்ணீர் தர கண்களும்
மறுத்துவிட மயங்கி விட்டாள்.

பகையைவிட கொடிய ஆயுதம் 
துரோகம் எனும் கொடிய விசம்.
மணம் முடித்து இரண்டு பிள்ளைகளாம். 
கார் வீடு பணம் என்று 
வசதியான பெரிய இடமாம்.

உயிர் வரையும் உரைத்தது.
உணர்வெல்லாம் ஊமையாக
மனதில் தைத்த முள் என்றும்
மறக்கவில்லை மறையவில்லை

ஆக்கம் குமுதினி ரமணன்  யேர்மனி

சேமமடுவூர் சிவகேசவன் எழுதிய ஆட்காட்டிகளே அவளிடம் சொல்லுங்கள்....

காரிருளில் கானகத்தில் 
கத்துகின்ற ஆட்காட்டிகளே!
அவளிடம் சொல்லுங்கள்...
நான் ஆட்காட்டிகளால்
காட்டிக் கொடுக்கப்பட்டேன் என்பதை...
என்னை அடித்திழுத்துச் செல்லும் போது
நீங்கள் துயில் கலைந்து கத்தியதைச் சொல்லுங்கள்....
கடந்த மாதம் நான் கொடுத்த முத்தமே
இறுதி முத்தம் என்று சொல்லுங்கள்...
அவளது கண்களை ஞாபகப்படுத்தவும்,
பரிசத்தை நினைத்து பூரிப்படையவும் என்னால் இனி
முடியாதென்பதை அறிந்ததால் கத்தும் ஆட்காட்டிகளே....
எனது மூச்சுக் காற்றுக்கூட அவளைத் தொடாது இனி....
அவளிடம் எனக்காக சொல்லுங்கள்....
நான் விரைவில் இருதயம் பிடுங்கப்பட்டு
மூளை சிதைக்கப்பட்டு கொல்லப்படுவேன்
என்பதைச் சொல்லுங்கள்....
அவள் வயிற்றிலிருக்கும் என் குழந்தை
இரத்தத்தில் தமிழுணர்வு பீறிட்டுப் பாய
ஆட்காட்டிகளே.....ஆட்காட்டிகளே.....
என் மனைவி காதில் சத்தமிட்டுச் சொல்லுங்கள்
உன் கணவன் கொடூரமாய் கொல்லப்பட்டான் என்று...


ஆக்கம் சேமமடுவூர் சிவகேசவன்
தமிழ்த் துறை
பேராதனைப் பல்கலைக் கழகம்



Mittwoch, 8. Juni 2016

கவி நகுலா சிவநாதன் எழுதிய ஒவ்வொரு விடியல் ‌

சூரிய கதிரொளி சுடர்மிகு பரப்ப
வீரியமாய் உடல் விளைவாக எழ
பாரிய சக்தி பலம் மிகு தந்திட
காரிய சித்தி கனிவாய்ப் பிறந்திடும்

நாளைய விடியலின் நம்பிக்கை ஒளி
நயமாய் மனதில் முளைவிட
காலை வேலைகள் கனிவாய் தொடர
க‌ன்னி முயற்சிகள் முகிழ்ப்பாய் அரங்கேறும்

அமைதியின் விடியலில் ஆனந்தம் பொங்கிட
அடுக்கடுக்காய் ஆயத்தங்கள் நிறைவு பெற
ஐம்புலன் அறிவும் தம்புலன் போட்டியிட
வென்றது மனது வெற்றியின் கழிப்பில்

ஒவ்வொரு விடியலும் தந்திடும் சுகம்
ஒளிமயமாய் இருக்கையில் ஓராயிரம் சுகம்
விடியல்தானே முனைப்பைக் கூட்டிடும்
நொடியில் வாழ்வை நுணுகிக் கற்றிடும்

விடியல் இல்லா வாழ்வு ஏது?
விளக்கு இல்லா ஒளி ஏது? 

கவிஆக்கம் –  நகுலா சிவநாதன்
n-1

Disqus Shortname

Comments system

 
Blogger Templates