Social Icons

Mittwoch, 16. November 2016

ஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் 19.05.2016 காலமானார்

ஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார்.
19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது.
யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்கு முன்னர் தனது இசை வித்துவத்தால் பல்லாயிரம் இரசிகர்களைக் கவர்ந்துகொண்டவர் யாழ் சீலன்.
''யாழ்ப்பாணத்தில் இசைவாணர் எம்.கண்ணன் அவர்கள் இருந்திருக்காவிட்டால் நான் இசைக்கலைஞனாகியிருக்கமாட்டேன். என் இசைக்கடவுள் கண்ணன் அவர்கள்'' எனக் கூறி வந்தவர் யாழ்.ரி.சீலன்.
இவர் தொடாத வாத்தியங்கள் இல்லை என்றே கூறலாம். கிற்றார் வாத்தியம் இசைப்பதில் புகழ்பெற்றிருந்தவர், மேலும் கீ போட், புல்லாங்குழல், வீணை, மிருதங்கம், ஈற்றில் ஸ் ரீல் கிற்றார் போன்ற வாத்தியங்களை இசைப்பதில் மிகவும் கைதேர்ந்தவராக விளங்கி வந்த எங்கள் தேசத்தின் இசைச் சொத்து.
கலாலயா இசைக்குழுவிலே தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தவர் தொடர்ந்து யாழ் நகரில் இயங்கிவந்த பல்வேறு இசைக்குழுக்களில் தனது பங்களிப்பை வழங்கி வந்தார்.
‘சீலன்ஸ்ரோன்’ என தனியாக ஓர் இசைக்குழுவையும் இவர் இயக்கியிருந்தார்.
தாயக மண்ணை விட்டுப் புலம் பெயரும் வரை யாழ் சுண்டுக்குளி ராஜன்ஸ் இசைக்குழுவில் அங்கம் பெற்று கீ போட், கிற்றார் போன்ற வாத்தியங்களை ஒரே வேளையில் இசைத்து இரசிக உள்ளங்களை மகிழ்வித்து வந்தார்.
பிரிட்டன் நாட்டுக்கு வருகை தந்த சீலன் அவர்கள் ரெய்ன்போ இசைக்குழுவின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்துக்கொண்டார்.
நாடக ஆசான் ஏ.சி.தாஸீஸியஸ் அவர்களின் நாடகங்களுக்கு இசையமைப்பதில் முழுமையான சிரத்தையோடு ஈடுபட்டுவந்தார்.
ஐபிசி தமிழ் 1997ல் லண்டன் - வொக்ஸோல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் தனது ஒலியமைப்பு தொழில் நுட்பத்தை பகிர்ந்திருந்தார்.
கலைஞர்களுடன் மிகவும் நேசத்துடன் உறவாடிவந்த யாழ் சீலன் அவர்களை கடந்த 07.05.2016 அன்று வைத்திய மனையில் பாடகர் கே.எஸ்.பாலச்சந்திரன் - ஜேர்மனி, பாடகர் எம்.பாக்கியராஜா - டென்மார்க், இசைக்கலைஞர் எம்.குருநாதன் - பிரிட்டன், இசையமைப்பாளர் கே.சுந்தர் (குட்டி மாஸ்ரர்) - நோர்வே, - நோர்வே இசைக்கலைஞர் ஆர்.கணேஸ் , ஆகியோர் சகிதம் சென்று பார்க்க முடிந்தது.
எம்மைக் கண்டதும் மிகவும் சந்தோசமடைந்தார்.
அவரது கடைசி நிமிடங்களில் சந்தித்துக்கொண்டதில் எமக்கும் திருப்தி.
ஈழத்து இசையுலகில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் யாழ்.ரி.சீலன்.
வாழ்க யாழ்.ரி.சீலன் புகழ்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates