Social Icons

Dienstag, 24. Mai 2016

குமுதினி ரமணன் எழுதிய வரதட்சணை!

பெற்றவள் பெற்றாள் பிள்ளை வரம்
பெற்றதும் பெண்ணே, செலவாம்.
கற்றவள் உயர்ந்து கவலை தீர்ப்பாள்
கடமையாய் கல்வியைப் பெற்றே
நற்றவள் நாளும் நலமாய் உயர்
நன்மை படைப்பாள் உலகில்.
மற்றவள் கூறும் வசைச்சொல்
மாற்றியே நடப்பாள் வாழ்வில்.

பெண்மையை போற்றிய பாரதியும்
பெருமையை புதிப்பித்த ஆண்மகனே.
கண்மை தீட்டிய பெண்ணழகில்
கவிழ்ந்திடாதே சீதனம் பார்.
வெண்மையாய் மனது புரிந்திருந்தும்
வெறுப்பாய் வறுமையில் பேசுவரோ.
தண்மையில் சுகமாய் சுகித்திருந்தும்
தணலாய் சொற்களைப் வீசுவாரோ .

குணமாய்ப் பெண்ணிருந்தும் குப்பையில்
குறைவாய் வதைத்திடுவாரோ மனதை.
பணமாய்த் தேடிப் பந்தியிலே, முந்தியே
பாரமாய் மனதையும் விற்றிடுவாரோ.
மணமாய்ப் பெண் உயிராக,நேசித்தாலும்
மாறுமா பாசம் வரதட்சணை தேடியே.
பிணமாய் மாமா போகும் வரை
பிடுங்கியே உயிரை மாய்ப்பாரோ.

சிரம் தாழ்த்திப் பணிவதெல்லாம்
சிறப்பறியாப் பணத்திற்காமோ.
தரம் பார்த்து பதவி உயர் தகுதிக்கு
பாசம் நிகர் நிறையோ.
கரம் பற்றி வாழ்வளித்து, மனக்
கருத்து வேறுபட பணமிங்கு மனைவியாமோ.
வரம் நீயென மனையவளை
வாழ்வளிக்கப் பாசமே தட்சணையாகுமே

தாய்மை காக்கும் உறவென்று,
தாரமாகும் வாழ்வு அவளே.
பொய்மையவள் நோயாக, மலடியென
பொறுத்திட்டாள்,பெரும் பழியும் தனதாக.
சேய்மை வாழத் தாயாக, தத்தெடுத்துச்
சேர்ந்திடவே அனாதையென யாருமில்லை.
வாய்மையது வாழ்வினிலே,அன்பு
வாழ மூலதனம் என்றும் நாளை வென்றிடவே.

தந்தையாகப் பெண்ணிற்கு சீதனமாய்
தருவதெல்லாம் கல்வியோடு ஒழுக்கமது.
கந்தையாக உடுத்திருந்த, வறுமையிலும்
கருத்தாகக் கண்ணாக காத்திருப்பர்.
நிந்தை செய்து அவர் உழைப்பை மீறி
நித்தம் திருடுவதோ வரதட்சணை.
சந்தையிலே மாடாக விற்றிடுதல்
சரித்திரமாய் தொடர்ந்திடுமோ சீதனம்.

நிலை இல்லாத உலக வாழ்வில்
நிரந்தரமாம் அன்பொன்றே.
உலை வைத்துப் பாசமதை
உயர்ந்திடுமோ சமூகம் நன்றே.
தலை விதியாய்ப் பெண்ணவளும்
தரித்திரமாய் மாற்றிடுமோ காலமது.
வலை விரித்துத் தேடுவதும் சாதி,பணம்
வகுப்பதுவும் நாளை நம் வீழ்வே.

மாற்றுவோம் நாளை பெண்
மறுமலர்ச்சி உலகை உயர்வாய்,
ஏற்றுவோம் அவள் நன்மைகளை
ஏட்டோடு உயர்த்தி நாளும்.
சாற்றுவோம் நன்றே,வரதட்சணை
சரிந்து, முதிர்கன்னிகள் வாழ.
போற்றுவோம் அவள் தாய்மை
போல், பெண்மை என்றும் வெல்ல


ஆக்கம் குமுதினி ரமணன்  யேர்மனி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates