Social Icons

Donnerstag, 14. April 2016

இரத்தினம் கவிமகன் எழுதிய சாவின் மடியில் தூங்கிய தமிழிச்சியின் குரல்




















நான் தெளிவானவள். 
என் உடல் வலிமை மிக்கது 
என் விழிகள் உறக்கத்தை விரும்பியதில்லை
என் கால்கள் என்றும் நடப்பதை
நிறுத்தியதில்லை
நான் தொலை தூர பயணத்தில்
விடியலின் திசை நோக்கி நடந்து
கொண்டு இருந்தேன்...
மலைகள் வெளிகள் ஆறுகள்
ஆயிரம் தடைகள்
கிடங்குகள் விளைநிலங்கள்
சேற்று சகதிகள்
பல குறுக்கே வந்த போதும்
என் பயணத்தில் தடை இல்லை
நடந்தேன் நடந்து கொண்டே இருந்தேன்
வானம் மடிந்து பூமிக்குள்
அமிழும் அந்த கரை நோக்கி நான்
சென்று கொண்டே இருந்தேன்
இடையே பெருங்கடல் குறுக்கறுத்த போது
தாண்டும் வலிமை
எனக்கு இருக்கவில்லை
நான் கடலின் ஓட்டத்தில்
அடிபடத் தொடங்கினேன்.
மூழ்கி மூழ்கி என் இறுதி மூச்சுக்காக
துடித்து கொண்டிருந்தேன்...
எனக்கான ஒரு துரும்புக்காக
அழ தொடங்கிய நாட்களில்
சிறு மீன் கூட துரும்பாகவில்லை
தத்தளித்து தவழ்ந்து கொண்டிருந்தேன்
எனக்கான நீர் வளையம் ஒன்றை
எங்கிருந்தோ வர கண்டேன்.
அதை நான் என் துரும்பாக
நானே நிர்மானித்தேன்
என்னை அந்த வளையத்துக்குள்ளே
நான் என்னை தொலைத்துவிட்டேன்
மரணம் என்னை துரத்தி கொண்டிருந்தது
மரணத்தின் வாசலாக
வந்து சேர்ந்தது நீர் வளையம்
தினமும் என்னை தின்ன தொடங்கியது
என் உடலை மட்டுமல்ல
உயிரையும் தின்று கொண்டிருந்தது
நான் நிலையற்று கிடந்தேன்
நான் நடந்து வந்த பாத சுவட்டை
மட்டுமே நீர் வளையம் சுற்றி கொண்டிருந்து
தினமும் என் உதடுகளை சப்பி துப்பியது போல
என் நடந்த பாதையையும் சப்ப தொடங்கியது
எனக்கு வலு இருக்கவில்லை
தடை போடும் நிலை இருக்கவில்லை
நீரின் வளையம் என் உடலில் மூட்டிய
தீ சுற்று சுழன்று என்னை தின்று கொண்டிருந்த போதும்
என்னை தினமும் தின்ன தவறவில்லை
என் பாதுகாப்பாய் உணர்ந்த என் நீர்வளையம்
என்னை முழுதாக தின்றுவிட்டது
இன்று என் உடலை அணுவணுவாக தின்ற
கதையை ஊர் முழுக்க சொல்லி
சிரிக்கிறது...
நான் என்ன செய்வேன்...?
கடலின் ஆழ் நிலத்தில் என்னை
புதைத்துவிட்டு என்
புதைகுழு மேலே நின்று
என் பாத சுவடுகள் என்று
என் உடலின் வலியை கூறி ஊர் சிரிக்க
மகிழ்கிறது...
நான் மௌனித்து கிடக்கிறேன்
நீர் வளையம் மட்டும் மீண்டும் மீண்டும்
என் இறந்த உடலை தின்ன
சுற்றி சுற்றி வருகிறது....
செத்தும் சாகடிக்க காத்திருக்கும்
நீர்வளையத்துக்கு என் மனசு தெரியவில்லை
அது கொண்ட உப்பு நீர் கூட்டத்தின்
சுழியில் தீண்டப்பட வேண்டிய
தமிழின் தமிழிச்சியே...


ஆக்கம்  இரத்தினம்கவிமகன்

  k a

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates