Social Icons

Donnerstag, 24. März 2016

திருமதி. கலையரசி சின்னையாவுடனான இலக்கியச் சந்திப்பில்"சேமமடுவூர் சிவகேசவன் "

ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட வித்துவான் வேந்தனாரின் மகளான திருமதி. கலையரசி சின்னையாவுடனான இலக்கியச் சந்திப்பில் நான்....
ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட வித்துவான் வேந்தனாரின் மகளான திருமதி. கலையரசி சின்னையா அவர்களுடனான இலக்கிய கருத்தாடல் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை இன்று (24.03.2016) காலை 10 மணிக்கு ஒழுங்கமைத்திருந்தது.பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர்.பேராசிரியர்.வ.மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இக் கருத்தாடல் இடம் பெற்றிருந்தது.
"காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக் 
கட்டிக் கொள்ளும் அம்மா 
பாலைக் காச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா "
என்று சிறுவயதில் எம் வாய் உச்சரித்த பாடல் வரிகளைப் படைத்த வித்துவான் வேந்தனாரின் தமிழ் படைப்பே அவர்தம் மகள் கலையரசி ஆவார். இவர் தனது உயர் கல்வியினை பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் தொடர்ந்தார். பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்ப் புலமையாளர்களால் புடம் போடப்பட்ட இவர்,1970 தொடக்கம் 1977 வரை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.இவரிடம் கற்ற மாணவர்களுள் பேராசியர்.துரை மனோகரன் ,பேராசிரியர்.வ .மகேஸ்வரன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். அதன் பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் ,சிறிது காலம் தற்காலிக தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.தற்போது அவுஸ்ரேலியாவில் தமிழ்ப் பணி ஆற்றி வருகின்றார் இவர்.தான் கடந்து வந்த பாதை தொடர்பாகவும் தன்னுடைய மாணவர்கள் தொடர்பாகவும் தன்னுடைய நிகழ்கால தமிழ் உறவு நிலை தொடர்பாகவும் இவர் உணர்வு பூர்வமான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். தான் புவியியல் துறையில் துறை போக வேண்டும் என்பது தனது பெற்றோர் விருப்பமாக இருந்த போதும்,தமிழின் மீது கொண்ட காதலால் தமிழ்த் துறையில் தனது கற்றலைத் தொடர்ந்ததாக கூறிய இவர் ,எதிர் காலத்தில் இளம் தலை முறையினராகிய நாம் தமிழ் உலகில் காத்திரமான ஆளுமைகளாக உருவாக வேண்டும் என எம்மை உற்சாகப் படுத்தினார்.அவர் கூறிய வார்த்தைகள் தமிழ்ப் பணி செய்ய வேண்டும் என்ற எம் ஆர்வத் தீக்கு நெய் வார்ப்பதாய் அமைந்தது. அவுஸ்ரேலியாவில் தமிழ் பயில்வோர் ஆர்வத்துடன் தமிழைக் கற்பதாகப் பூரிப்புடன் பகிர்ந்து கொண்ட இவர், அண்மையில் அவுஸ்ரேலியாவில் நடந்த கலை நிகழ்வினை நினைவு கூர்ந்தார்.இந் நிகழ்வில் நடை பெற்ற வில்லிசை நிகழ்வில் ஏழு(7) வயது சிறார்கள் தங்கள் தங்கள் மழலை மொழியால் ,
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை" 
என்ற பாடலை சிறப்பாக உச்சரித்துப் பாடியதை அக மகிழ்வுடன் குறிப்பிட்டார்.புலம் பெயர் தேசங்களிலும் தமிழன் தமிழை வளர்க்க மேற் கொள்ளும் முயற்சியும் தமிழ்ச் சிறார்கள் கொண்டுள்ள தமிழ்க் காதலும் எம்மை மெய் சிலிர்க்க வைத்தது.கருத்துப் பகிர்வில் நானும்(சேமமடுவூர் சிவகேசவன் ) என் தமிழால் உறவாடினேன்.கருத்துப் பகிர்வின் பின்னர் பேராசிரியர் .வ .மகேஸ்வரன்,"இவர் எமது மாணவர்,இதுவரை இரு(2) நூல்களை எழுதிஉள்ளார் (கட்டுரைத் தொகுப்பு ,கவிதைத் தொகுப்பு ) " என என்னைப் பற்றி திருமதி .கலையரசி சின்னையாவுக்கு அறிமுகம் செய்து வைத்தமை அக மகிழ்வினைத் தந்தது. பல்கலைக் கழக வட்டம் என் மீது கொண்டுள்ள நுணுக்கமான பார்வையையும் இது வெளிப் படுத்தியது எனலாம்."நீங்கள் தமிழ் இலக்கிய உலகில் உங்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டும்" என்ற கனிவான வேண்டுகோளுடன் திருமதி .கலையரசி சின்னையா அவர்கள் எம்மிடம் இருந்து விடை பெற்றார்.நாமும் தமிழ் அன்னை ஈன்ற அன்னையை தமிழ்ப் பாசத்துடன் வழி அனுப்பி வைத்தோம்.
"சேமமடுவூர் சிவகேசவன் 

தமிழ்த் துறை 
பேராதனைப் பல்கலைக் கழகம்."

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates