Social Icons

Donnerstag, 31. März 2016

மட்டுவில் ஞானக்குமாரனின் எல்லாம் இழந்த பின்னால்
















உப்புக்கும் அரிசிக்கும்
அடிபட்டுக்கிடக்கின்ற
இந்த ஒப்பற்ற வரத்தை அருளியவன் யாரோ
ஒற்றைத் துளி கூட இல்லாமல் 
கண்ணீர் கிணறு வற்றிக்கிடக்கிறது
அஞ்சலிக்க
ஒரு வார்த்தை இல்லாது
வார்த்தைக்கடல் வறண்டு போனது
அதிகாரத் திமிரின்
அக்கிரமத்தை வெளிச்சம் போட
கோபுரத்தின் உச்சத்திலேறி
உயிரைக் கொழுத்தியெறிந்திருக்கிறான்.
எல்லாம் இழந்த பின்னால்
மிச்சமாய் இருக்கும் ஒற்றைத்துளி உயிரைக்கூட
எரித்துக்காட்டவேண்டியிருக்கிறது
அனுமான் போல் நெஞ்சை
உரித்துக்காட்ட வேண்டியிருக்கிறது
நாங்கள் நல்லவர்களென்று
வெறும் காற்றுப்பட்டாலே
கரைந்து போகும் கற்பூர மனிதனை
தீக்குச்சி சொற்களால் உரசலாமா
இலவசஅரிசி என்பதற்காய்
அதை வாய்க்கரிசிபோல மாற்றலாமா
அந்த அரிசியோடு சேர்த்து
அகதியெனும் அடைமொழியையும்
சேர்த்தே ஊற்றலாமா
அகதியெனும் இழிசொல்லை
உயிரைப் பிச்செறியும் உச்சவலு
மின்சாரத்தால் கழுவ நினைத்தானோ
உச்சத்;திலேறி நின்று உரக்க கத்தி
ஏது பலனும் ஆகப்போவதில்லையென
அறிந்தே சாவைத்
தழுவ நினைத்தானோ
உயரமேறிப் பாய்ந்துவிட்டான்
உயிரோடு
சாய்ந்து விட்டான்
அவன் சாவென்பது
ஊடகங்களைப் பொறுத்தவரை
ஒரு நாள் தலைப்புச்செய்தி
அரசியல் வாதிக்கு
அன்றைய தேதிக்கான கண்டன அறிக்கை
அவன் குடும்பத்துக்கு
காலமெல்லாம் நடுத்தெருவல்லவா
ஒரு நடிகை தடுக்கி விழுந்தால்
அலறித்துடிக்கும் மாந்தரில்
பாதிப்பேர் கூட இல்லையா உனக்காக
ஒரு துழி நீர் சிந்த
(தமிழ் நாட்டு அகதி முகாமில் தற்கொலை செய்து கொண்ட ஈழத்து தமிழ் அகதி இரவீந்திரனுக்காக)


                          ஆக்கம் மட்டுவில்                                      ஞானக்குமாரன் 





Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates