மதுமதியின் கண்கள் சிவந்து கொவ்வைப்பழங்களாக வீங்கி இருந்தன. நேற்றிரவு சங்கரினால்அவள் தூக்கம் பறி போயிருந்தது. அவன்மேல் மாமி எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் அதை உதாசீனப்படுத்திவிட்டு குடியும் கூத்துமாக திரியும் அவனை பார்க்க கோபம்தான் மனதிற்குள் அவளுக்கு வந்தது. பெற்றதாயின் நம்பிக்கையை வீணாக்கும் அவன் இந்த குடிபழக்கத்தில் இருந்து விடுபடுவானா ?என்ற ஆதங்கம் அவளுக்குள் அவளை அறியாமல் புகுந்து இருந்ததில் தப்பு இல்லை. சொந்த உறவுகள் ஆயிற்றே.
ஆனாலும் இதுவரை அவளால் அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை.. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவன் நேற்று மட்டும் அன்பாக அவளுடன் பேசியது அவளுக்கு பெரியதொரு வியப்பாகத்தான் இருந்தது. " சீ எனக்கேன் தேவையற்ற சிந்தனை .. மாமி மாமா அவையும் அவையின்றை பிள்ளையும் ..என் குடும்ப சுமை தலைக்குமேலை கிடக்கு .. இதிலை எனக்கென்ன வேண்டிக்கிடக்கு.. இன்னும் ஒரு இரண்டு வருசத்திலை படிப்பு எல்லாம் முடிஞ்சிடும்.. வேலையிலை சேர்ந்து என்ரை குடும்பத்தை முன்னேற்றனும்..""" மனதிற்குள் பேசியபடி சோபாவில் சாய்ந்து கண்களை இறுக மூடியபோதும் அவளால் தூங்க முடியவில்லை.. அம்மா தொலைபேசியில் சொன்ன அந்த வார்த்தைகள் அடிக்கடி மனதை குடைந்தவண்ணம் இருந்தது. " பிள்ளை இப்ப இருக்கிற வீட்டுக்கு வாடகை காசை மட்டும் தவறாமல் வேண்டுறாங்கள் ஆனால் குசினிக்கை மழை வந்தால் ஒழுக்கு.ஒரு அறை சின்ன விராந்தைக்கை எப்படி இந்த இரண்டு குமருகளையும் வைச்சு காலந்தள்ளுறது... வேறை வீடு பாப்பம் என்றால் அட்வான்சா நிறைய கேட்கிறாங்க". ஆம் உண்மைதான்..
இன்று பல கஸ்டங்கள் மத்தியில் மதுமதியின் குடும்பம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறது.
இன்று பல கஸ்டங்கள் மத்தியில் மதுமதியின் குடும்பம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறது.
நல்லாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் வலிவடக்கை இராணுவம் ஆக்கிரமித்தபோது இடம்பெயர்ந்து எத்தனை தொல்லைகள்.. மூட்டை முடிச்சுகளுடன் இடம்மாறி இது கடைசியாக கோண்டாவிலில் கிடைத்த சின்ன வீடு. வசதி இல்லாத ஒரு வீடுதான். அதாவது கிடைத்ததே என்ற நிம்மதி ஒன்று போதுமானதாக இருந்தது. காலச்சக்கரமும் துரிதமாக சுழன்று ஓடிக்கொண்டிருந்தது. மதுமதியின் தந்தை உயிரோடு இருந்தவரை வீட்டு நிர்வாகத்தை அவரே திறம்பட நிர்வகித்திருந்தார். தாயாருக்கு அந்தளவு பொறுப்பும் இல்லை அத்தோடு தெரிய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. இப்போது எல்லாம் தாயாரின் தலையில் சுமையாகிபோய்க்கிடக்கிறது.
இப்போது வலிவடக்கு குடிமனைகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்ட போதும் அவர்களால் அங்கு போய் வாழமுடியாத நிலை. வீடு பாழடைந்து பாம்பு புற்றுகளுக்கு நல்ல வாழ்விடமாகவும் ,வீட்டை சுற்றியுள்ள காணியில் முட்பதர்களும் . விஷச்செடிகளும் ஆளடி உயரத்திற்கு வளர்ந்து செழித்து இருந்தகாட்சி புகைப்படத்தில் பார்த்தபோது அழுகையே மதுமதிக்கு வந்தது. அன்று சிறு குழந்தையாக வளர்ந்த அந்த பால்ய மண் தெல்லிப்பளை. இரு பிரமாண்டமான கல்லூரிகளான யூனியன் கல்லாரியும் மகாஜனாக்கல்லூரியும் பிரசித்தமானவை.. இரு கல்லூரிகளிலும் அவள் படித்தவள். அம்பனையில் இருந்து தெல்லிப்பளைசந்தியில் வந்து ஐஸ்பழக்கடைக்கு போகாமல் பாடசாலை நாட்கள் இருந்ததில்லை.. மகாஜனாக்கல்லூரி விளையாட்டுப்போட்டியும் அதில் பச்சைஇல்ல தலைவியாக இருந்த நாட்கள்.. களிப்பானவை. தெல்லிப்பளை துர்க்கையம்மன் திருவிழா இப்போது நடைபெற்றாலும் அந்த அழகிய கிராமங்கள் தெல்லிப்பளை , அம்பனை சோபை இழந்துதான் இன்றும் அவள் கண்களில் தென்படுகிறது. அவள் வாழ்ந்த வீட்டோரம் இன்று கால்கள் வைத்து நடக்கவே பயமாக இருப்பதாகவும்,மிதிவெடி இருக்கலாம் என்ற அச்சம் ஒருபுறம் என தாயார் குறைபட்டுக்கொண்டிருந்தார். கூலிக்கு ஆட்களை அமர்த்தி சுத்தப்படுத்தலாம் என்றாலும் மணித்தியாலத்திற்கு கூலி ஆயிரம் ரூபாவோடு சாப்பாடும் கொடுக்க வேண்டும். காணியை சுற்றி கிளுவை வேலி போடுவதென்றாலும் இருபத்தாயிரம் ரூபா வேண்டும். மதுமதியின் அக்காளின் ஆசிரியத்தொழில் சம்பளம் உடுப்புக்கும் சாப்பாட்டிற்கும்தான் போதுமானதாக இருந்தது. விலைவாசி ஆனைவிலை குதிரைவிலையாக அங்கு ஏறிக்கொண்டேபோகிறது. இவற்றை எல்லாம் மனதில் அசைபோட்டபடி இருந்த மதுமதி நேரத்தை பார்த்தபோது மணி முற்பகல் 11.00 காட்டியது. மதுமதி தாயகத்தை சிந்தித்தால் அவளுக்கு நேரத்தை பற்றிய கவலையும் இல்லை. அந்த சந்தோசத்தில் தன்னை மறந்து போயிருப்பாள். புலம்பெயர்ந்து இங்கு வந்து எத்தனை ஆண்டுகள் போனாலும் அங்கு அனுபவித்த அந்த இன்பத்தை எவராலும் தந்து விட முடியாது என்பது அவளை பொறுத்தவரை அசைக்க முடியாத உண்மை. " சீ என்ன வாழ்க்கை .. தனியாய் " அலுத்தபடி உடுப்பு தோய்க்கும் மெசினுக்குள் உடுப்புக்களை போடத்தொடங்கினாள். வெளிவாசலில் கூடு கட்டி இருந்த அந்தக் குருவி(sol sort) தன்குரலில் சங்கீதமாக இணையை அழைத்துப் பாடிக்கொண்டிருந்தது.
(தொடரும்)
கதையாக்கம்
ரதிமோகன்
(தொடரும்)
கதையாக்கம்
ரதிமோகன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen