Social Icons

Dienstag, 24. Mai 2016

யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் ஆசிரியர்கள் கருத்தரங்கு


கடந்த 27 வருடங்களுக்கு மேலாகக் ஐரோப்பா தழுவிய ரீதியில் தமிழ்க்கல்விப் பணியாற்றி வருகின்ற யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையானது யேர்மனியில் மட்டுமல்லாது சுவிஸ் மற்றும் நெதர்லாந்து உட்பட்ட நாடுகளில் பற்பல பாடசாலைகளை ஒருங்கிணைத்து பல்வேறு கருத்தரங்குகளையும் பயிற்சி நெறிகளையும் நடாத்தி வெற்றி கண்டிருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் ஆசிரியர்கள் கருத்தரங்கானது 16.05.2016 திகதியன்று யேர்மனி- டோட்மூண்ட் நகரில் Dietrich-Keuning-Haus , Leopold Str. 50-58 , 44137 Dortmund என்ற முகவரியிலமைந்த மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் செயற்குழு உறுப்பினரும் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான திரு.வைரமுத்து சிவராசா அவர்களின் தலைமையில், மூத்த ஆசிரியப் பெருந்தகைகளின் கரங்களினால் சுடரேற்றிய மங்கலவிளக்கேற்றல் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து எமதுதேசத்தின் இன விடுதலைக்காகவும் போரின் அனர்த்தங்களாலும் உயிர்நீத்த எம் உறவுகளுக்காகவும்,உலகின் பல்வேறு இயற்கை அழிவுகளிலும் உயிர் துறந்த மக்களுக்காகவும் இரண்டு நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று மௌனஅஞ்சலி செய்யப்பட்டது.
அத்துடன்.. எமதுதேசத்தில் மிகசிறப்பான முறையில் கல்விப் பணியாற்றிய தமிழ்க் கல்விமான்கள் பலரை நாமறிவோம்.. குறிப்பாக கல்வியின் வளர்ச்சியில் தமது அளப்பரிய சேவையினால் உயர்ந்து எமது உள்ளங்களில் குடியேறியுள்ள பலரில்,அண்மையில் அமரத்துவமடைந்த இருவரை இங்குநினைவு கூர்ந்தமை இந்நிழ்வுக்குப் பொருத்தமாயிருந்தது. அவர்களில் ஒருவர் செங்கையாழியான் என்ற புனைபெயரில் இலக்கியவாதியாகவும் எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் அறியப்பட்ட அமரர் க. குணராசா அவர்கள், எமக்கும் எமது சந்ததிக்கும் பல பாடநூல்களை படைத்துத் தமிழ்க்கல்விப்பணி செய்துள்ளார். அவரோடு,கண்டி உடத்தன்னவின என்றநகரில் பிறந்து கல்வியாளராக தமிழ்க்கல்விப் பாடத்திட்டத்திற்கமைவான பலதரப்பட்ட வினாவிடை நூல்களைப் படைத்ததோடல்லாது மொழி வளத்துக்கான பல நூல்களை ஆக்கித்தந்த இலக்கியவாதி,வெளியீட்டாளர்,எழுத்தாளர் பதிப்பாசிரியர். .என்றே தொடர்ந்து பலநூறு பயனானநூல்களை எமக்கு விட்டுச் சென்ற அமரர்பி.எம். புன்னியாமீன் அவர்களுக்கும் யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை மரியாதை செய்யும் முகமாக அங்கு மலரஞ்சலி நிகழ்வொன்றை ஏற்பாடுசெய்திருந்தது.
அதில் அனைவரும் பங்குகொண்டு அமரத்துவமடைந்த கல்விமான்களான செ.குணராசாஅவர்களதும் பி.புன்னியாமீன் அவர்களதும் உருவப்படங்களுக்கு மலரஞ்சலியைச் செய்யுமாறு யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் செயற்குழு சார்பில் வேண்டிக் கொள்ளுவதாக கல்விச் சேவையின் செயற்குழு உறுப்பினரும் யேர்மனி- ஒபகௌசன் நகர் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான கவிஞர் திரு. அம்பலவன் புவனேந்திரன் தன் நிகழ்ச்சித் தொகுப்பின்போது அனைவரையும் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அமைதியாக மலரஞ்சலிநிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து கல்விச் சேவையின் உபதலைவியும் யேர்மனி- ஒபகௌசன் நகர் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான திருமதி கலாமகேந்திரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
'கேடில் விழுச்செல்வம் கல்விஒருவற்கு
மாடல்லமற்றையவை'
என்றதிருக்குறளைத் தாரக மந்திரமாகத் தாங்கிவருகின்ற யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் ஆசிரியர் கருத்தரங்கில் நடைபெறவுள்ள விடயங்களாக பின்வரும் அம்சங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டது
1. தமிழ்மொழி:- கல்வி, கற்றல், கற்பித்தல்
பேராசிரியர்.முனைவர்ச.சச்சிதானந்தம் அவர்கள்
(பாரிசு பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம் - அண்ணாமலைப்
பல்கலைக்கழகம் ஐரோப்பா - இலங்கை தொலைதூரக் கல்வி
இயக்குநர்)
2. இலக்கணம்
திருமதி.சந்திரகௌரி சிவபாலன்
(முன்னாள் ஆசிரிய ஆலோசகர்,
யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை செயற்குழு உறுப்பினர்)
3. இலக்கியம்
திரு.பொ.சிறீஜீவகன்
(பொறுப்பாளர், தலைவர் யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை)
4. ஆசிரியர்கருத்தும்,கலந்துரையாடலும்
யேர்மனியில் தூர இடங்களிலிருந்தும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் கல்விச்சேவையில் செயற்குழு உறுப்பினர்களும் பரீட்சைக் குழுவினரும். மகிழ்வாகவும் உற்சாகமாகவும் காலை உணவு வழங்கி உபசரித்தனர். தொடர்ந்து, மண்டபத்தில் குழுமியிருந்த ஆசிரியர்கள் ,பாடசாலை நிர்வாகிகள், கல்விச்சேவையின் செற்குழு உறுப்பினர்கள் என்று கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் தம்மைத்தாமே சுய அறிமுகம் செய்துகொண்டனர்.
இதனையடுத்து, தலைமையுரை இடம்பெற்றது. யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் நீண்டகால செயற்குழு உறுப்பினரும் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவரும் மண் கலை இலக்கிய சமூக இதழின் பிரதம ஆசிரியருமான திரு வ.சிவராசா அவர்கள் தமது தலைமையுரையில், தமிழ்க் கல்விச் சேவையின் 27 ஆண்டுகாலச் செயற்பாடுகளைச் சுருக்கமாகவும் நற்பணிகளை விளக்கமாகவும் தாயத்திலும் பிறதேசங்களிலும் - குறிப்பாக சுனாமி, புயல் ,வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளில் பாதிப்புற்ற மக்களுக்காக யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் மாணவர் அணியின் உதவிகளையும் மனிதநேயப்பணிகளையும் சுட்டிக்காட்டியதுடன் எதிர்காலச் சந்ததியினர் புலம்பெயர் தேசங்களில் தாய்மொழிக்கல்வியை கற்கவேண்டிய அவசியங்களையும் வெளிப்படுத்தி தன் சிற்றுரையை நிறைவு செய்தமையிலிருந்து கல்விச்சேவையின் ஆத்மார்த்தமான சேவைகளை அறியமுடிந்தது.
பேராசிரியர். முனைவர்ச.சச்சிதானந்தம் அவர்களின் வருகை தாமதமாகிக் கொண்டிருந்ததால் முதல் நிழ்வாக ஆசிரியை திருமதி.சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் இலக்கணம் சம்பந்தமான விளக்கங்களும் கற்கை நெறிகளும் ஒளிப்படங்கள் மூலம் விளக்கப்பட்ட நிகழ்வானது ஆரம்பமானது. மாணவர்கள் போல தங்கள் கேள்விகளை திருமதி.சந்திரகௌரி அவர்களிடம் மற்றைய ஆசிரியர்கள் தொடுத்தபோது தெளிவான விளக்கங்களுடனும் உதாரணங்களுடனும் அவர், அவரவர் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். மாணவர்கள் இலக்கணத்தைப் பயில்வதற்கு ஆசிரியர்கள் கையாளவேண்டிய நுணுக்கங்கள், கையாளவேண்டிய உத்திகள் என்பவற்றையும் ஆசிரியை திருமதி.சந்திரகௌரி விளக்கிய இந்நிகழ்வானது ,நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் தெடர்ந்ததால் சுமார் நாற்பது நிமிடங்களுக்கு மேலாக அந்நிகழ்வு நீடித்தமையை உணரமுடியவில்லை.
அவ்வேளையில்தான் பிரான்சிஸின் பரிஸ் நகரிலிருந்து பேராசிரியர். ச.சச்சிதானந்தம் அவர்களின் தெலைபேசி வாயிலாகக் கிடைத்த செய்தியிலிருந்து, அவரின் பயணம் அங்கு நிழ்ந்த சிறு விபரீதத்தால் தடைப்பட்டதாக அறியமுடிந்தது. மிகவும் வேதனையுடன் அவ்வேளை அனைவரும் எற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் ,பொறுப்பாளர் திரு.பொ.சிறீஜீவகன் அவர்கள், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் சார்பாக பேராசிரியர். ச.சச்சிதானந்தம் அவர்களுக்குத் தெலைபேசி வாயிலாக ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்தார்.
நேரம் விரைந்து கொண்டிருந்தமையால் தொடரும் நிகழ்வினைத் தொகுப்பாளர் தெரிவித்தார். இலக்கியம் சம்ந்தமான உரையுடன் தொடங்கிய, யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் பொறுப்பாளரும் டோட்மூண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் ஆசிரியருமான திரு.பொ.சிறீஜீவகன் அவர்கள் தான் ஆய்ந்து வழங்கிய தமிழிலக்கியவரலாறும் அவ்வப்போது எழுந்த நூல்களின் தோன்றுதல்களும் காலமாற்றங்களால் தமிழிலக்கியங்களில் ஏற்பட்ட நவீனத்துவங்களும் தொட்டுக்காட்டப்பட்டதுடன் பாடநூல்களில் அவற்றைப் புகுத்தியுள்ளமைக்கான விளக்களையும் உணர்வுபூர்வமாகத் தொகுத்துதமிழ்ப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ள இலக்கிய வடிவங்களையும் வகுப்புகளுக்கும் வயதுக்கும் ஏற்ற அடிப்படையில் மாணவர்கள் அறிந்து உணரும் வண்ணம் படைக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளமையை உதாரணங்களோடு விளக்கியமை அனைவரையும் கவர்ந்ததெனலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இலக்கியவடிவங்களை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதன் அவசியம் கையாளவேண்டிய இலாவகமான உத்திகள், இரசிப்புத்தன்மை என்பவற்றை தனது விளக்கவுரையில் தெளிவுபடுத்தினார்.
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்தூறும் அறிவு.
என்பதற்கொப்ப பற்பல வினாக்களுக்கும் சந்தேகங்களும் தெளிவுபட்ட தன்மைகளும் வினாக்களுக்கான பதில்களும் அநுபவப் பகிர்வுகளும் நடந்தேறிய இருபெரும் தலைப்புகளில் நிறைவாகவும் திருப்தியாகவும் உள்வாங்கப்பட்டமையை அனைவரின் வதனங்கில் அப்பிக்கிடந்தமை பூரிப்பைத்தந்தது. பின்னர், தொடர்ந்த இடைவேளையில் அனைவரும் மதியபோசனத்தில் கலந்து கொண்டனர். செவிக்குணவில்லையெனில் சற்று வயிற்றுக்கும் ஈயப்பட்டதாக எண்ணாமல் வயிறார அனைவரும் அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். மதியபோசன இடைவேளையினையடுத்து ஆசிரியர்கருத்தும், கலந்துரையாடலும் இடம்பெற்றது. சுமார் அறுபது நிமிடத்திற்கு மேலாக நீடித்த கலந்துரையாடலில் பல்வேறு அம்சங்கள் அலசப்பட்டன. தத்தமது அநுபவப் பகிர்வுகளையும் பாடநூல்களில் காணப்படுகின்ற சூழலுக்கொவ்வாத பாடங்களின் அமைவுகளையும் பிரஸ்தாபித்தமையை, யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் பொறுப்பாளர் பாடங்களின் அவசியத்தன்மையை விளக்கமளித்துவிபரித்தார்.
பாடசாலை நிர்வாகப் பொறுப்பாளர்களின் கடமைகளில் காணப்படுகின்ற சிக்கல்கள், நடைமுறைக்கு ஒத்துழைக்காத சிலபெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஒவ்வாத தன்மைகள் எடுத்துரைக்கப்பட்டதால் பலரின் ஆலோசனைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான நேரமின்மை, மற்றும் பரீட்சைக்காலங்களில் மாணவர்களைத் தயார்செய்தலுக்கு சூழ்நிலையின் ஒவ்வாத தன்மைகளும் விவாதத்துக்குள்ளாகி தீர்வுகள் எட்டப்பட்டன. பேராசிரியர். முனைவர் ச.சச்சிதானந்தம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமை பெரும் ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் உள்ளார்ந்த ரீதியில் ஏற்படுத்தினாலும் அவர்கள் மூலம் விரிவுரையாக வழங்கப்படவிருந்த தமிழ்மொழிக் கல்வி, கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பயிற்சி நெறிகள் பற்றி நிகழ்வில் கலந்துகொண்ட அநுபவம்மிக்க பயிற்றப்பட்ட மூத்த ஆசிரியப் பெருந்தகைகளால் விளக்கமளிக்கப்பட்டதோடல்லாமல் ,மாணவர்களில் அக்கறை, ஆசிரியர்களின் அணுகுமுறைகள் மற்றும் சகிப்புத்தன்மை முதலான விடயங்களும் அநுபவக்கூறுகளாகப்பகிர்ந்தளிக்கப்பட்டமை நிறைவான திருப்தியளிகக்கூடியதாக அமைந்ததென்றால் மிகையில்லை. மேலும், கற்கைநெறிகளில் ஏற்படுத்த வேண்டிய புதியமாற்றங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதுடன் தூர இடங்களிலிருந்து வருகை தந்தவர்களின் வேண்டுதலை செவிமடுத்து நன்றியறிதலுடன் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிகழ்வோடு கருத்தரங்கானது இனிதே நிறைவுபெற்றது. பயிற்சியோடும் புரிந்துணர்வோடும் தாய்மொழிக்கல்வியை எம் இளம்சந்ததிக்கு ஊட்டவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும் தியாக மனப்பான்மையோடும் உழைக்கின்ற அத்தனை ஆசிரியப்பெருந்தகைகளும் போற்றி வாழ்த்தப்பட வேண்டியவர்களே. புலம்பெயர்தேசங்களில் எம் வருங்காலத் தலைமுறையினர் தமிழைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நல்நோக்குடன் எத்தனையோ இடர்களின் மத்தியில் செயற்படுகின்ற யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இந்த ஆசிரியர்கள் கருத்தரங்கானது மிகவும் அவசியமானதும் பயனுள்ளதும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
யேர்மனியிலிருந்து... கவிச்சுடர். அம்பலவன் புவனேந்திரன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates