Social Icons

Dienstag, 31. Mai 2016

கவிமகன்.இ எழுதிய அசலூரின் பார்வையில் ஒற்றை ரோஜா

காய்ந்த ஓலைகள் 
சருகாகி கிடக்கிறது
வீழ்ந்த விதைகள் முளை 
கொள்ள முடியாது 
முடங்கி கிடக்கிறது

குருத்தெறிய முடியாத
தாய் வள நிலம் 
தன் சேய்களோடு 
அக்னியின் அனலில் 
சுருண்டு கிடக்கிறது

அருகில் ஓடும் அருவி 
காய்ந்து வரண்டு 
பசித்த உடலின் 
எலும்புக்கூடாய் 
வெடித்துக்கிடக்கிறது

கோரை புற்கள் கடதாசியாய் 
உடல் சுருங்கி தூங்குகின்றன
நிலத்தின் மேனி எங்கும் 
குளிர்மைக்கான ஏக்கம் 
தீர்க்கப்படாமலே 
சாம்பலாகி கிடக்கிறது.

என் விழிகள் பசுமைக்காக 
ஏங்கி கிடக்கும் அந்நிலத்தை
நோக்க தொடங்கின 
எங்கும் பசுமையற்ற செவ்வாணம்
விரிந்து கிடக்கிறது

அருகில் தெரியா பச்சையம் நடுவே
அந்த ஒற்றை ரோஜா மட்டும் 
புன்னகைத்து துளிர்த்து கிடந்தது
என் அவதானிப்பின் முடிவில் 
அதன் வீச்சம் புரிந்து 
கொள்ளப்பட்ட போது 
அது செடியாக மாறியே இருந்தது

அதன் பச்சையத்தின் நியம் 
புரியாமல் தினமும் 
அந்த வீதியில் பயணிக்கிறது 
என் மனது 
அதன் இருப்பை 
நான் பார்த்துக் கொண்டே 
நகர்கிறேன்

இளம் பச்சை அல்லிக்குள் 
மூடப்பட்டுக்கிடந்த 
சிவப்பு இதழ்கள் தங்கள் 
புன்னகையை காட்ட 
எத்தனித்து கொண்டன

தினமும் மாறுதல்கள் 
இளம் பச்சை கரும்பச்சையாகி 
தன் உடல் பிரித்து 
ஊமையாக எட்டிப்பார்க்கத் துடிக்கும் 
சிகப்பு நிற உதடுகளுக்கு 
வழிதருகின்றன...

நான் அதை ரசித்துக் 
கொண்டே செல்கிறேன்
கொஞ்சம் உரமிட்டு நீரூற்ற 
மனதில் துளி எண்ணமில்லை 
விலங்கிடப்பட்ட என் விழிகள் 
என்னை வென்று
வெறுமையாக்குகிறது

நான் பார்வையாளனாய் 
ரசித்துக் கொண்டே இருக்கிறேன்
இதனால் எனக்கென்ன? 
அந்த நிலமாச்சு மரமாச்சு 
வளர்ந்தால் என்ன ? 
கருவிலே எருவானால் என்ன? 
என் மனம் நினைத்துக்கொண்டே 
இருக்கிறது.

மரம் வளர்ந்தால் 
அந்த நிலம் துளிர்த்திடும் 
சிவப்பு எச்சரிக்கை 
அடிக்கடி வந்தாலும் 
நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

அருகில் கூடாரமிட்டு தயாராய்
காத்திருக்கும் கருவண்டுகளால் 
மரம் பிடுங்கி வீசப்படும் 
உறுதியாக நம்புகிறேன்.

மரமும் திடம் கொண்டு எதிர்க்கிறது
எது நடந்தாலும் நான் மௌனியாகி 
பார்த்திருப்பதே என் முடிவு 
முகை வெடிக்க தன் வலி மறந்து 
இதழ் விரிக்கிறது அந்த செடி

பார்த்து 
பரவசமாகி என் இயலாமையை 
மறந்து அருகில் செல்கிறேன் 
இரத்த நிற ரோஜா இதழ்களை தீண்ட 
வட்டமிட்டு கொண்டிருந்தன 
பல பத்து வண்டுகள்

அவற்றோடு முட்டி மோதி நிமிர்ந்து 
நிற்கிறது அந்த மலர். 
அதற்கு உள வலிமை உண்டு 
ஆயிரம் வண்டுகள் சூழ்ந்தாலும் 
நிமிர்ந்தெழுந்து இனப்பெருக்கம் 
செய்யும் திடம் உண்டு

முட்டி மோதி முப்பது நாட்கள் 
தான் உதித்த செடிக்காக 
நிமிர்ந்து நின்றது அந்த செடி
பூவின் இதழ்கள் வண்டுகளின் 
தீண்டல்களால் உதிர தொடங்கின

தினமும் இதழ்கள் வீழ்ந்து 
மண்ணுக்கு எருவாக தொடங்கின 
என் விழிகள் புரிந்து கொண்டன 
வண்டுகளின் தீண்டலின் வீரியம் 
அதிகரித்தே கிடந்தது 
என் கரங்கள் வண்டுகளுக்கு 
சாமரம் வீச தொடங்கின

இதழ்கள் துணிந்து நிமிர்ந்து நின்றன 
பூவில் ஊறும் தேனினை 
குடிக்க இறுதி தீண்டல் தொடங்கி இருந்தது 
நான் பார்த்துக்கொண்டே இருந்தேன் 
தடுக்கவில்லை

எங்கோ பூத்த ஒற்றை ரோஜாதானே... 
மனது மீண்டும் எண்ணிக் கொண்டது.
வீழும் இதழ்களை நான் கணக்கிட்டு 
கொண்டே இருக்கிறேன்
அந்த ரோஜா செடியின் 
அடி வேரில் பாதுகாப்பாய் 
கிடந்த இளம்பச்சை புல்லிகள் கூட
கருகத்தொடங்கி இருந்தன 
அவற்றையும் கணக்கிட்டேன்

கருவண்டுகள் இறுதி தீண்டல்களை 
தொடங்கி இருந்தன 
சுற்றி சுற்றி ரோஜாவை 
முட்டிக்கொண்டிருந்தன 
பூவின் இதழ்கள் வண்டுகளின் 
எச்சிலில் கலந்து கிடந்த 
விசத்தில் உதிர்ந்து விழுந்தன 
நான் அதையும் மௌனியாய் 
பார்த்து கொண்டிருந்தேன்.

ரோஜா செடி கொஞ்சம் கொஞ்சமாய் 
தன் பச்சையம் 
தொலைக்க தொடங்கி இருந்தது 
புன்னகையோடு பார்த்து ரசித்தேன்

அன்று ஒரு காலைப்பொழுது 
கலையாத தூக்கம் கலைந்து போன அதிகாலை பொழுது 
கருவண்டுகள் ரோஜா காய்ந்து 
சருகாகியதாய் கொக்கரித்து 
கொண்டிருந்த குரல் கேட்டு 
எழுந்து பார்க்கிறேன்.

அந்த செடியின் பச்சையம் 
இரத்த சிவப்பு காய்ந்து 
சருகாகி கிடந்த இதழ்களின் 
கீழே மறைந்து கிடந்தது 
வண்டுகளின் கொக்கரிப்பில் ஒலியில்
ரோஜா செடியின் பச்சையம் 
நீண்டுகொண்டே சென்றது. 
என் விழிகளும் நகர்ந்து 
கொண்டே இருக்கிறது 
அந்த பச்சையத்தின் துளிர்ப்புத்தேடி


ஆக்கம்  
கவிமகன்.இ  



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates