கதைசொல்லியாக, என் வழிவந்த கதைகளில் ஒன்று, இன்று 'இவண் இராவணண் !" பொதுப் பார்வைக்கு தயாராகிவிட்டது.
இதுவரை வெளிவந்துள்ள பல்வேறு குறும்படங்களில், ஏதோவொரு வகையில் எனது பங்கு இற்றைவரை இருந்துள்ளது.
எனது பெயரினைச் இட்டும் இடாமலும், வெளிவந்த இப்படைப்புக்களில் எனது பங்களிப்பு என்பது எந்தவகையில் அப்படைப்பாளிகளை ஊக்குவித்தல், ஊற்றுவித்தல் ஆகும்.
ஆனால் இது ஒருவகையில் நேர்மறையாக, 'என்ன சுதன்ராஜ், அரசியலை விட்டிட்டு கலைத்தளத்துக்கு வாங்கள், அதுதான் உங்களுக்கான இடம்' என்ற பலரைச் சொல்ல வைத்துள்ளது.
அடிப்படையில் நான் கலைஞனும் இல்லை, கவிஞனும் இல்லை, ஊடகனும் இல்லை, படைப்பாளியும் இல்லை......இல்லை இல்லை....நான் ஏதுமே இல்லை.
ஆனால், ஏதுமே இல்லாத நான், எனது சமூக - அரசியற் செயல்முனைப்பின் தேவைகளுக்கு, அந்தந்த காலங்களில் எனக்கு கிட்டிய, எட்டிய துறைகளை, கருவியாக பாவித்துள்ளேன்.
அவ்வகையில், எனக்கு எட்டியதும், கிட்டியதும் என்னை இப்பொதுவெளியில் கலைஞனாக, படைப்பாளியாக, கவிஞனாக, ஊடகனாக, கதைசொல்லியாக என பன்முகமாக அடையாளப்படுத்தியது.
நான் வகித்து வருகின்ற பாத்திரங்களும், இத்துறைகளும் சமூக அரசியற் போர்களத்திற்காக ஆயுதங்களே அன்றி வேறொன்றும் இல்லை.
அதன் தொடர்சியாகவே நான் தற்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் வகிக்கின்ற பாத்திரம். ஆனால் பலர் என்னை அரசியல்வாதியென விழிப்பது தவறான மதிப்பீடுகளில் ஒன்று.
இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக வெளிவந்துள்ள பல்வேறு குறும்படங்களில், ஏதோவொரு வகையில் எனது பங்கினை அப்படைப்பாளிகளுக்கு வழங்கியுள்ளேன்.
குறிப்பிட்ட படைப்புக்களில், எனது பெயர் இட்டும் இடாமலும், வெளிவந்த நிலையில், தற்போது வெளிவரத் தயாராகியுள்ள ' இவண் இராவணன்' குறும்படத்தில் கதையாளனாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன்.
இதில் எனது முக்காலக் கலைஞர்களும் பங்காற்றியுள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி :
தொடக்காலம் : இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், எனது கலை வாயிலின் தொடக்ககாலத்தில் எனது 'ஜீவன்' திரைபடத்தில் நடித்தும், பாடியும் உள்ள கலைஞன் சதாப் பிரணவன்,
இடைநிலைக்காலம் : ரீரீஎன் தொலைக்காட்சியில் எனது படலைக்குபடலையில் நடிகனான கலைஞன் ரமணா,
சமகாலம் : எனது வளரி வலைக்காட்சியின் வழிவந்த கலைஞர்கள் விஜிதன், தயாளன்
என பலரும் பங்கெடுத்துள்ள இப்படைப்பு கதையளவில், சமூகத்தின் மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள மதிப்பீடுகள், மாந்தர்கள், உளவியல் என சமூகத்தின் பல்வேறு விடயங்களை பல பரிமாணங்களில் முட்டிமோத விளைகின்றது.
இப்படம் பொதுவெளிக்கு வந்தபின்னர் விரிவாக பேசுகின்றேன்....
அதுவரை....
Keine Kommentare:
Kommentar veröffentlichen