ஆழக்கடலின் கரையில்
மணல் மடி தன்
சேற்றுப் படுக்கையில்
அவனை தன்னோடு இறுக்கி
அணைத்து கொண்டது
அவன் இறந்தானா இருப்பானா
நீல கடல் அலைகள் அறியவில்லை
அவன் பஞ்சணையில்
மஞ்சம் கொண்டானா
மண்ணணைக்குள் தன்னை
தொலைத்தானா
ஆர்ப்பரிக்கும் அந்த
நெடிய அலைகளுக்கு
தெரிந்திருக்கவில்லை
அவை தாங்கள் ஓயாது தவழும்
நீல கடல் தாயை வேண்டி
கண்களில் கறுப்பு போர்க்க
தொடங்கி இருந்தன
அவனின் காதலுக்காக
ஓயாத தங்கள் வீச்சை கூட
ஓய வைக்க துணிந்தன
கரை முழுக்க ஓடி ஓடி தேடி
களைத்து போய் கிடந்தன
தங்கள் மடி தவழ்ந்தவனின்
பாதத் தொடுகைக்காய் அவை
கரையை முத்தமிட்டுக் கொண்டே இருந்தன
அங்கே ஏராளம் சிப்பிகளும்
செத்துப்போன நண்டு கோதுகளும்
துயிலுரியப்பட்ட மீன்களின்
வெற்று முட்களும் மிஞ்சி கிடந்தன
அவற்றுக்கு களைப்பு இல்லை
காதலில் கட்டுண்டல்
ஓய்வை கொடுக்கவில்லை
ஒவ்வொரு முட்களுக்குள்ளும்
நண்டு கோதுகளுக்குள்ளும்
சிப்பிகளுக்குள்ளும் தம்மவனை
அவை காண வந்திடுமோ
என்று அச்சம் எழுந்தாட
எதையும் ஏற்றிட நிலை பெற்று
அலைகள் கரை முழுக்க
மூசிக் கொண்டிருந்தன
அவற்றை கடல் அடக்க பார்க்கிறது
ஆர்ப்பரிக்கும் அலைகளின் கண்ணீர்
உப்பு நீரோடு சங்கமித்து
நீலக்கடல் சிவப்பாகி கொண்டிருக்கிறது
அலைகளின் மடி தடவி வாழும்
மீன்கள் கூட இவற்றின் விழிநீர்
சூட்டில் கரைந்து போகின்றன
அலைகளோடு தாமும் அழுதழுது
விழி மூடி கிடக்கிறது
நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன
மாதங்கள் வருடங்களாகி
வருடமும் பல கடந்து அலைகளின்
தேடலில் மூர்ச்சையாகி போகாது
கிடக்கிறது நீலக்கடல்
நாங்கள் கடலை ரசிக்கிறோம்
புகழ்கிறோம் அவற்றின் வலிகளை
எழுத்தாக முனைகிறோம்
அலைகளோடு அலையாகி
விடியலுக்காய் சாய்ந்து போன
அவனின் இருப்பை மட்டும்
கண்டறிய எம்மால் முடியவில்லை
நாம் மீண்டும் அந்த அலைகளில்
கால் நனைத்து எங்கள் எச்சங்களை
கழுவி விட துடிக்கிறோம்
அவையோ எங்களால் தீண்டப்படும்
அசிங்களை தாங்காது மரணித்து
ஓய்ந்து போக துணிகின்றன
கடல் என்ன செய்யும்?
தனது செல்வங்களை இழந்து
தனிமையில் நொந்து எங்கள்
அசிங்கங்களின் எச்சங்களை அங்கங்கே
தன் உடலில் சுமந்து கொண்டு காத்திருக்கும்
அவனின் வருகைக்காக....
Keine Kommentare:
Kommentar veröffentlichen