எம் .எஸ் .கந்தையாவின்
சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் -நூல் அறிமுக விழா-ஒரு பார்வை
எம் .எஸ் .கந்தையா எழுதிய "சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்" எனும் நூலின் அறிமுக விழாவானது 23.04.2016(சனிக்கிழமை ) காலை 10 மணிக்கு கண்டி கச்சேரி தொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் எழுத்தாளர் திரு.பெ .முத்துலிங்கத்தின் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் திரு.வே.கிருஷ்ணன் கலந்து சிறப்பித்திருந்தார்.வரவேற்புரையினை மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர், ஊடகவியலாளர் திரு.இரா .அ.இராமன் நிகழ்த்தினார். நூல் பற்றிய கருத்துரையினை திரு .ஆர் .நித்தியானந்தன் நிகழ்த்தினார்.இவர்தம் உரையினில்,இற்றைவரை மலையகச் சமூகம் பல்வேறு வகையினில் நசுக்கப்பட்டு வருகிறது.இற்றைவரை இலங்கையின் அபிவிருத்திக்கு முதுகெலும்பாக இருந்துவரும் சமூகத்தின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட வண்ணமே உள்ளது. அதனைத் தனது சொந்த அனுபவத்தின் ஊடாகவும்,அவதானிப்பின் ஊடாகவும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார் என்று குறிப்பிட்டதுடன்,கடந்த காலங்களில் எவ்வாறெல்லாம் மலையகச் சமூகத்தினர் சுரண்டப்பட்டனர்,என்பதை ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டு அதனை எவ்வாறு இந்த நூல் உள்வாங்கியுள்ளது என்பது குறித்து விளக்கமளித்தார். பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்த கல்வி இராஜாங்க அமைச்சர் திரு.வே.கிருஷ்ணன் ,மலையக சமூகம்சார் ஆவணப் பதிவு என்ற ரீதியில் இந் நூல் குறித்த முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
இந் நூல் குறித்த மதிப்பீட்டு உரையினைப் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு .எம் .எம் .ஜெயசீலன் அவர்கள் சிறப்பாக நிகழ்த்தியிருந்தார். இவர் தனது மதிப்பீட்டு உரையிலே,மலையகத் தமிழர்களது இலங்கை வருகை,அவர்கள் அனுபவித்த கொடுமைகள், பிரஜா உரிமை மறுக்கப்பட்டு மீண்டும் இந்தியா அனுப்பப்பட்டமை, இன்றுவரை அவர்கள் எதிர் நோக்கும் இன்னல்கள் முதலிய யாவற்றையும் வரலாற்று நிகழ்வுகளைத் துணைக்கொண்டு விளக்கமளித்ததுடன்,இந் நூல் அதனை எவ்வாறு பதிவு செய்துள்ளது என்பதனையும் தெளிவாக எடுத்துரைத்தார். மலையகத் தமிழர்கள் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட போது,இந்திய திரும்பியவரே "சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் " நூலின் ஆசிரியர் மு .சி .கந்தையா.இந்தியா சென்று குடியேறத் தலைப்பட்ட மலையக மக்களுக்கு தமது பூர்வீகமான இந்தியாவிலும் அதிருப்தியே காத்திருந்தது எனலாம்.இற்றைவரை பிரித்தானிய அரசின் சுயநலத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மக்கள் வடுக்களைச் சுமந்தபடியே வாழ்கின்றனர் என்றார். நன்றி உரையினை திரு .சந்தானம் சத்தியநாதன் நிகழ்த்தினார்.
என்னுடைய நோக்கு நிலையில் இந் நூல் மலையக மக்களது வாழ்வியலைப் பதிவு செய்திருக்கும் சிறப்பான ஆவண நூலாகும்.,இன்று வரை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தீர்க்கப் படவில்லை எனலாம். அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகளும்,அவர்களது பிரச்சனைகலுக்குப் பூரணமான தீர்வினைக் காணத் தவறிவிட்டனர் எனலாம். பிரஜா உரிமை மறுக்கப்பட்டு மீண்டும் இந்தியா சென்ற மக்கட் கூட்டம் எதிர் நோக்கிய பிரச்சினைகள் வித்தியாசமானவை. தமிழர் வரலாற்றில் தொடர்ந்தும் தமிழர்கள் கசப்பான உணர்வுகளையே நுகர்ந்து கொண்டிருக்கின்றனர்.எமது உழைப்பை சுரண்டி,உரிமைகளைப் பறித்து வேறு இனக் குழுமங்கள் குளிர் காய்ந்து கொண்டிருகின்றன.இந்த நிலை என்று மாறும் ?
ஆய்வு: சேமமடுவூர்சிவகேசவன்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம் .
