கண்ணீரால் உனை எண்ணி
கவிதைகள் பல வரைந்தேன்.
காரிகை என் வாழ்க்கையிலே,
கவலைகள் தான் மிச்சமா?
கண்ணே மணியே கிளியே என்றாய்.
காதல் மொழிகள் பேசியே வென்றாய்.
கன்னிப்பருவங் கொள்ளை கொண்டாய்.
கனவிலும் கண்ணீரில் மிதக்க வைத்தாய்.
வஞ்சியவள் நானும் உந்தன் - ஆசை
வலையினில் விழுந்துதான் போனேன்.
பத்தோடு பதினொன்றாக - என்னை
பதம் பார்த்துத்தான் சென்றுவிட்டாய்.
எண்ணி எண்ணி ஏங்குகிறேன்.
ஏமாந்த மனமதை தேற்றுகிறேன்.
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை..
உணர்வதற்கு ஒரு வழி சமைத்தாய்.
புதுமைப் பெண்ணைப் பாடிய,
பாரதியும் ஆண்தானடா!
பெண்விடுதலை நிதமும் பேசிய,
விவேகானந்தனும் தாய்மகன்தானடா!
அவ்வழி வந்த நீயும்தான் யாரடா?
எவ்வழி சிந்திய நீயுமோர் பேயடா?
எப்பிறப்பில் நீ வந்திருந்தாலும்,
என்னெழுச்சி இனி மாறாதடா!
தடுமாறித் தடக்கிவிழுந்ததும்,
தடையென்று எண்ணேனடா
என்னை நான் மாற்றுவேன்!
என்னை நான் விடுவிப்பேன்!
என்னருமை தெரியும் நாளது,
வெகுதூரத்தில் இல்லையுனக்கு.
அன்று நான் உன்னைவிட்டு,
தொலை தூரம் போயிருப்பேன்.
ஆக்கம் மஞ்சு மோகன். கனடா
Keine Kommentare:
Kommentar veröffentlichen