நீண்டு நெளிந்து கிடக்கிறது
நெடிய நொடிய பாதை
திருத்தியமைக்க முன்வந்தவர்களைக்கூட
நீ அனுமதிப்பதில்லை
திரும்பிப்பார்
நிமிடத்துக்கு நீ செய்த கொலைகளை.
பிணங்களின் மேலேதான் பயணம் தொடர்கிறது.
உதிரத்திலேயே உருவாகிறது
உன் ஒவ்வொரு சுவடும்.
மறந்துவிடாதே
நிமிடத்துக்கு
நீ அளித்த மரணங்கள்
உன் மரணமாக
உனக்கு மரணசாசனம் எழுதப்படுகிறது
உன்னால் மரணித்த மரணமணிகள்
உன்னை மன்னிப்பதில்லை.
பாதைமேல் உரிமை கொண்டாடுகிறாய்
உயிலைத்திறந்து பார்
உன்னுயிர் கூட உனதல்ல
தலையுயர்த்தி
நெஞ்சு நிமிர்த்தி
வீறுடை போடலாம்
தடக்கி விழுவென்றே
கால்களுக்கடியில் காலம்
கல்லுவைத்திருக்கிறது.
நுண்ணிய வைரசையே
வெல்லமுடியாத உனக்கு
எதற்கடா வீராப்பு.
விதி நீயெரியத் திரிவைத்திரிக்கிறது
விதைத்ததை அறுக்க
வாழ்க்கையாப்பு
வைத்திருக்கிறது ஆப்பு
வெற்றியாளன் என
வீறுநடைபோடுகிறாய்
போ...போ..வேகமாய் போ!!
உச்ச நீதிமன்றில் உனக்காக
வழிமேல் விழிவைத்து
உயிலுடன் காத்திருக்கிறது
உன்மரணம்.
அணைத்து கொள்
அணைந்து கொள்
Keine Kommentare:
Kommentar veröffentlichen